குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் கடந்தநிலையில் அதன் தொழிற்பாடுகளை தொட்டுப்பார்போமேயானால் அதன் நீண்ட வரலாற்றையும், வரலாற்று நாயகர்களையும் நினைவில் மீட்டவேண்டிய தேவையும் இன்றியமையாத ஒன்றாவே காணப்படுகின்றது.

 

ஊரின் நடுவே கம்பீரமாகக் காட்சிதந்த பெரிய மண்டபத்தில் எமது ஊரின் பெரியவர்களினால் தொடங்கி வைக்கப்பட்ட இச் சங்கம் கிராமத்தின் தேவைகளிற்காக அயராது உழைத்த முன்னய நாட்களிலும் பார்க்க தற்காலத்தில் பல தரப்பட்ட அவலங்களினாலும் அல்லல்படும் எம் ஊர் மக்களுக்காக ஆற்றிவரும் சேவை அளப்பரியது. அல்லலுறும் மக்களுக்கு ஆறுதல் தரும் இச் சங்கம் புலம் பெயர் தேசத்தில் இருந்து ஊர் திரும்பும் எம்மவருக்கு மதிப்பளித்து கௌரவம் செய்யும் வழமை கொண்டது, இதுவே எங்கள் கிராமத்தின் மண்வாசனைக்கு சான்று எனலாம். இடம் பெயர்து புதிய உறவினருடன் வாழும் எம் முதியவர்களை வருடம் தோறும் சந்திப்புக்கு அழைத்து பரிசுப் பொருட்கள் வழங்கி (கலங்காதே மனமே காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என ) மகிழ்விக்கின்றது.

இவ் அரும்பணியை திறமமையாகச் செய்யும் பெருமையெல்லாம் இச் சங்கத்தைக் அசையாத அரசமரமாக கட்டிக் காக்கும் அதன் நிர்வாக சபையினரையே சாரும். ஊருக்கு ஊர் வாழும் எம் ஊரவரை ஒன்று திரட்டி நிர்வாகம் அமைப்பது செயலில் மிக எழிதான காரியம் அன்று. எப்படியாவது இச் சங்கத்தை இயக்க வேண்டுமென்ற நல் நோக்கம் கொண்ட பெரியவர்கள் கடமையில் இருந்;து இளைப்பாறிய வயதிலும் கிராமத்தின் சேவையில் தம்மை இணைத்து வைத்திருக்கும் இன்றய காலகட்டத்தில் அவர்களின் செயற்பாடுகள் போற்றப்படவேண்டியதொன்றாவதோடு அவர்களின் பணிக்கு பக்க பலமாக புலம்பெயர் ஊரவர் அனைவரும் தொழிற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 
கடந்த 15 வருடங்களிற்கு மேலாக இச் சபையின் தலைவராக இருந்து தொண்டாற்றும் இளைப்பாறிய அதிபர் சி. நடராஜா அவர்கள் எங்கள் கிராம மக்கள் அழிவி;ன் வடுவால் விரக்த்தியின் விழிம்பிற்கு செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு அபயக்கரம் நீட்டும் அருங்குணம் படைத்தவர். தேவைக்கேற்ப திறமையுடன் காரியமாற்றும் இவர் கலங்கும் எம் உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர்.

பலவருடங்களிற்க்கு முன் திருடர்கள் எம் கிராமத்தில் தம் கைவரிசையைக் காட்டியபோது ஊர் மக்களை ஒன்று திரட்டி இரவுக்காவல்குழு ஒன்றை அமைத்து திருட்டை ஒளிக்க வழிசெய்தவர். 17.01.1986 அன்று அதிகாலை வேளையில்; தூக்கத்திலேயே மீளாத்துயில் கொண்ட எங்கள் கிராமத்தின் மூன்று உறவுகளின் மறைவால் பயத்தில் உறைந்து போய் இருந்த ஊர் மக்கள், அவ் அதிர்ச்சியால் மீள முன்  மறைந்தவர்களின் மரண வீடு முடிந்தவுடனேயே வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து கிராம அபிவிருத்சிச் சங்கத்தில் இறந்து போனவர்களின் குடும்பங்களுடன் நேரடியாக உரையாட சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுத்து எமது ஊர் நிலமையை வெளியுலகம் அறியச்செய்தவர்.

அன்று முதல் இன்றுவரை எங்கள் கிராம மக்களுக்காக அயராது உழைத்து வரும் இவ் ஆசிரியர் அழிவடைந்து ஆரவாரமற்று இருக்கும் எங்கள் கிராமம் மக்கள் பாவனை;க்கு மீண்டும் திறக்கப்படும் போது அதன் ஆக்கம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் பேரவாக் கொண்டவர். இவரின் எண்ணக்கரு முழுவதையும் ”குரும்பசிட்டியின் அழிவும் ஆக்கமும்” என நூலாகவே எழுதிவைத்திருப்பதைப் பார்க்கும் போது ஊரின் மீது இவர் கொண்ட அன்பும் ஊர் மக்கள் மீது கொண்ட மதிப்பும், வெளிப்படையாகவே தெரிகின்றது.

எங்கள் ஊர் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப் படவேண்டும் என்று காலம் காலமாக கோசம் எழுப்பும் இவ் ஆசிரியர் பல வருடங்களாக மக்களை ஒன்று திரட்டி மறியல் செய்து எம் ஊரவர்களி;ன் கோரிக்கைகளை ஊரறியச்செய்து வருகின்றார் இவரின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று சில வருடங்களின் முன் ஜரோப்பிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இவ் வருடத்தின் முற்பகுதியில் யாழ்நகர் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இடம் பெயர் மக்களின் அமர்வில் அரசியல்கட்சி தலைவர்கள் முன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் உரையாற்றியதோடு, அரசின் உயர் பீடம் வரை அறைகூவல் விடுத்து எம் ஊரின் நிலமையை அண்மையில் மக்கள் சென்று பார்க்க ஏற்பாடு செய்திருந்தது யாவரும் அறிந்ததே. காரியம் ஆற்றுவதில் திறமையும், தளராத நம்பிக்கையும் கொண்டு எங்கு சென்று யாரை அணுகி எங்கள் ஊரின் நிலமையையக் கூறமுடியுமோ அங்கெல்லாம் இவர் அணுகும் விதமும் தன் நம்பிக்கை கொண்ட இவரின்  செயலுக்கு வெற்றி நிட்சயம் கிடைத்தே தீரும் என்பது திண்ணம்.

ஊரை விட்டு இடம் பெயர்ந்து இருபது வருடமாக அலைந்து திரிந்து வாடகை வீட்டில் வாசம் செய்யும் எம் மக்களைப்பற்றியும், போரின்; வலியைச் சுமந்தபடி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து உள்ள உறவுகள் பற்றியும் தரவுகளுடன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் 28.02.10 அன்று வெளியான தினக்குரல் பத்திரிகையில் வழங்கிய பேட்டியில் எமது மக்களின் வசிப்பிட, தொழல், மற்றும் கல்வி போன்ற வசதிகளுக்காகன அவர்களின் அவல நிலையை வர்ணித்திருந்தார். அத்துடன் பாதுகாப்புக்காரணங்களுக்காக போடப்பட்ட எல்லைகள் அகற்றப்படுவதும், மீள அமைக்கப்டுவது பற்றி தமிழ்நெற் என்ற ஆங்கில இணையத் தளத்திற்கும் அண்மையில் பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார். இவற்றைப் பார்க்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதெல்லாம் அதி உச்சமான அழுத்தங்களைக் கொடுத்து எமது கிராமதத்துக்கு செல்ல உள்ள தடையை அகற்;ற வேண்டும் என்று கிராம அபிவிருத்திச் சங்கமும், இடம் பெயர் நலன் காக்கும் நிர்வாகமும்; தொழிற்படுவது சொல்லித் தெரிய வேண்டி ஒன்றல்ல.

உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பகுதிக்குள் வந்தகாரணத்தால் மற்றைய கிராமங்கள் போல எங்கள் கிராமமும் மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்டிக்கின்றதே அன்றி, இனி எவரும் செல்ல முடியாத இடமாக மாற்றம் பெறவில்லை. அல்லது அத்து மீறியாரும் எங்கள் மண்ணில் யாரும் குடிறேறவுமில்லை. மக்களின் பாவனையின்றி குடியிருப்புக்கள் பல காலமாக சிதைவடைந்து பேயிருக்கின்றது. கட்டிடத்தை உடைத்து களவாடலாம், மக்களின் மனங்களைக் களவாடமுடியாது. மண்ணை வெட்டி மாற்றிடம் கொண்டு செல்ல இயலாது. பௌதிக பரப்பளவில் எந்த வித மாற்றமும் இதுவரை நிகழவும் இல்லை. பிரவேசத்தடை தளர்த்ப்பட்டால் கிராமம் புத்துயிர் பெற பல காலம் தேவையில்லை.

எங்கள் கிராமத்திற்கு இதே நிலை முன்பும் ஒருமுறை வந்தது. 1987ன் முற்பகுதியில் கிராமம் வெறுமை கண்டது. ஆனால் மிக விரைவாகவே எந்த விதமான பெரிய ஆர்ப்பாட்டங்களுமின்றி எம்மவர் ஊர் திரும்ப சந்தர்ப்பமும் கிடைத்தது. அப்போதும் அழிக்கப்பட்டிருந்த எங்கள் கிராமத்தை 3வருட காலத்தில் சீர் செய்து வழமை நிலைக்கு எம்மவர் கொண்டுவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். இப்போது காலம் நீண்டுவிட்டது. அதற்கு காரணங்களும் நீண்டுகொண்டேபோகின்றது.

உயர்பாதுகாப்பு வலயம் என அறிமுகப் படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் மாவிட்டபுரத்தைச் சோந்த ஒருவர் தனது சொந்த வீடு செல்ல அனுமதி கேட்டு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு அவருக்கு சாதகமான தீhப்பு வழங்கப்பட்டும் பல காலங்களாக அரசதரப்புக்கு கொடுத்த அழுத்தங்களின் பின் இப்போதுதான் பாதை திறக்கப்பட்டு அங்கு மக்கள் செல்ல அனுமதி கிடைத்திருக்கின்றது. இந்த வகையான நடவடிக்கைகளே மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட நிலங்களின் நிலை பற்றி வெளி உலகம் அறிந்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் இருக்கின்றது. இது போன்ற ஒரு சட்ட நடவடிக்கையை எங்கள் ஊரில் இருந்து எவரும் இதுவரை முன்னெடுத்ததாகத் தெரியவரவில்லை. 

வலிவடக்கு உயர்பாது காப்பு வலயத்திலனால் இடம் பெயர்ந்த மக்களின் சார்பாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் ஆசிரியர் சி நடராஜா அவர்களும் அவரது குழுவினரும் ஆற்றும் பணியைப் போற்றும் போது தனி ஒரு மனிதனாக நின்று இடம்பெயர்வின் அவலத்தை வெளியுலகம் அறியக் குரல் கொடுத்த இன்னுமொருவரை இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமாகின்றது.


அதிகார மட்டங்களில் தனக்கிருந்த பலத்தைப் பிரயோகித்து மரணிக்கும் வரை தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் ஏற்பட்ட கொடுமையை அறைகூவல் விடுத்துக்கொண்டிருந்தவர் மும்மொழி விற்பனரான எங்கள் ஊரின் மைந்தர் காலஞ்சென்ற நடராஜா சுவர்ணராஜா அவர்கள். அரசாங்க அதிபர் முதல் அரச தலைவர் வரை தன் ஆற்றல் மிகுந்த எழுத்தினால் அழுத்தம் கொடுத்தவர்  அவரின் மறைவிற்காக வெளிவந்த மலரினை படித்தால் இவற்றின் விபரம் யாவும் புரியும். ”அந்திம காலத்தில் அமைதியான சூழலில் தான் பிறந்த மண்ணிலே கௌரவத்துடன் கூடிய சுயமரியாதையுடன் வாழ்வதே தனது இறுதி விருப்பம்” என அந் நூலில் ஆங்கிலத்தில் பதித்து வைத்த அந்த இனிய மனிதரின் விருப்பம் நிறை வேறாது போய்விட்டது. ஆனால் அதுவே பலரின் விருப்பமாகவும் இருக்கின்றது.

எங்கள் கிராமத்திற்கு உள்ள பிரவேசத் தடையை அகற்றி மக்களின் சுயமான நடமாட்டத்திற்கு வழிசெய்வதற்காக   எத்தனையோ இடர்களின் மத்தியிலும், மனித உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டு, பல தரப்பட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துக் கொண்டும் கிராம அபிவிருத்திச் சங்கம் செயலாற்றும் விதம் ஒப்பற்ற ஒன்றாகும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பததைப் போன்று நமது மண்ணை மீண்டும் பொன்வயலாக மாற்றும் பணியில் இருந்து மனங்குன்றாது தொழிற்படும் எம்மவர் செயற்பாட்டுடன் புலம் பெயர் வாழ் குரும்பசிட்டியர்களின் பணியை உற்று நோக்கினால், இதுவரை எந்த ஒரு வெளி நாட்டிலாவது தனியாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ தாம் வாழ்கின்ற பகுதியில் உள்ள ஒரு நகரபிதாவிடம்  என்றாலும் பிறந்தமண்ணின் இன்றைய நிலையைக் எவரும் எடுத்துரைத்தாக எந்த தகவலும் இல்லை.

நான்கு சுவருக்குள் நாங்கள் கூடி இருந்து ஊரை இழந்துவிட்டோம் என்று எங்களுக்கு நாங்களே கூறினால் அது சுவருடன் கதைப்பது போன்றே இருக்கும் வெளியில் எந்தச் செய்தியும் எவரையும் சென்றடையாது. உழைப்பையும் நேரத்தையும் உரமாக இட்டு எதிர்காலத்தில் பயன் தரும் வகையில் எதிர்பார்ப்புடன் காரியமாற்ற வேண்டுவது காலத்தின் கட்டாயமாகும். வெளிநாடுகளில் ஒரு அரசியல் தலைவரையோ அல்லது மூன்றாம் உலகநாடுகளி;ன் வெளி விவகாரங்களைக்கையாழும் அதிகாரிகளையோ சந்திப்பது என்பது ஒரு தொலைபேசி அழைப்போடு அல்லது, மின் அஞ்சல் ஒன்றின் மூலமாகவோ செய்து முடிக்க கூடிய எளிதான விடயம். இலத்திரனியல் தொழில் நுட்பமும், தகவல் தொடர்பாடலும் இலகுவாக்கப்பட்டிருக்கும் இன்றய காலகட்டத்தில், எங்கள் கிராமத்தின் முன்னைய நிலையையும், இன்றைய கோலத்தையும்  உலகறியச் செய்வது புலம் பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் கடமையாவதோடு தாய் நிலத்தில் கிராமத்தின் விடிவிற்காக உழைக்கும் எம்மவருக்கு பலம்சேர்ப்பதாகவும் இருக்கும். மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் விடாப்பிடியாக நின்ற பல அரச தரப்பு செயற்பாடுகள் சுமூக நிலைக்குத் திரும்பி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயங்களாகும். எங்கள் மண்ணின் இன்றைய நிலையை நாங்கள் தான் வெளிக் கொண்டுவரவேண்டுமே தவிர அடுத்தவர் வந்து கேட்டுத் தெரிந்து கொள்வார் என இருந்தால் எங்கள் ஊர் மறக்கப்பட்ட மண்ணாக மாற்றமடைவதை தடுக்க முடியாத ஒன்றாகப் போய்;விடும்.

அடுத்து எமது உறவுகளின் வாழ்வை மேம்படுத்துவது என்பது பொருளாதார உதவி என்ற வரையறையில் நின்று விட்டால் மட்டும் போதுமானதாக இருந்துவிடப் போவதில்லை, அதிலும் ஒருவரின்; துன்பத்தை நீக்குவதாக நினைத்து நிலை குலைந்து போய் இருப்பவரை நிமிர்ந்து நிற்க உதவுவதற்குப் பதிலாக வாழ்கைமுழுவதும் அவரை உறை நிலையில் வைத்திருக்கும் நிலையில் உதவி புரிவது, உதவியாக என்றும் இருக்கமாட்டாது பதிலாக வெளி நாட்டு உதவி எப்போதும் கிடைக்கும் என்று முயற்சி எதுவும் இன்றி முடங்கிப்போக வைக்கும்  செயலாகவே இருக்கும். ஊரில் நாம் கண்டபெரியவர்கள் பலர் இன்று வயோதிப நிலைக்கு இயற்கையக மாறி இருக்கலாம்,  உழைப்பதற்கு உடல் உடன்படாத நிலைக்கு மாற்றமடைந்திருக்கலாம் ஆனால் இயைவர்களைப் பொறுத்த வரையில் கல்வியே அவர்களின் கண்கண்ட தெய்வமாக இருக்கின்றது. பாடசாலைக் கல்வியும் அதன் பேறாக அவர்களின் நற்சித்தியுமே உயர்கல்விக்கு வழிசமைத்துக் கொடுப்பதோடு சமுதாயத்தில் நற்பிரஜைகளாக மாற்றம் பெற உந்து சக்கியாகவும் இருக்கின்றது.

ஒவ்வொரு செயலிலும் எங்கள் ஊர் பெரியவர்களின் பெயர்களை உச்சரிக்கும் நாம் அடுத்தவர் பிள்ளைகளின் கல்வி அறிவுக்கு உதவி புரிந்து மக்களின் மனங்களில் குடிகொண்டவர்களை முன்னிறுத்தி செயலாற்றுவதே வழிகாட்டியவர்களுக்கு வழித்தோன்றல்கள் செய்யும் மரியாதையாக என்றும் இருக்கும். ஊரில் இருந்து இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழ்ந்து வரும் எம்மவர்கள் ஊரில் வாழும் பல குடும்பங்களின் வாரிசுகள் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியகி உயர் நிலைக்கு வர பல வருடங்களாகத் தொடர்ந்து உதவி புரியும் புனிதப் பணியை தங்கள் தன்னலமற்;ற சேவையாக செய்து கொண்டிருக்கின்றார்கள். தாயகத்தில் படிக்க வேண்டிய வயதில் தொழில் தேடிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு எங்களின் உறவுகள் செல்ல  பொருளாதராம் காரணமாக இருந்தது என்ற செய்தி வரும் போது உதவிபுரிய எவருமில்லை என்று எம்மவர் குழந்தைகள் விடப்பட்டார்களே என்ற விரக்த்தியும் தோன்றுவது இயல்பானது. ஆகவே தாய்நிலத்தில் இயங்கும் நற்பணி மன்றங்களின்; மூலம் மாணவர்கல்விக்கு உதவுவது என்பது வெளி நாடுகளில் வாழும் ஊரவர் அனைவரினதும் கடமையாகும். ஒரு குழந்தையின் கல்விக்கு எங்கள் நாடுகளின் நாணயங்களில் ஒரு நாளைக்கு ஒரு டொலர், அல்லது ஒரு பவுண் அல்லது ஒரு யூரொ  சேமித்தால் அத்தொகையானது ஒருவருடத்திற்கு 50 ஆயிரம் இலங்கை நாணயத்தை தொட்டுவிடும். சிறு துளி பெருவெள்ளமாக இத்தொகை சமுதாயத்தில் சிறந்த சிற்பியை உருவாக்க உதவிடும். இத்தகைய நற்பணிக்கு முன்னின்று உழைக்க முன்வரும் மக்கள் சேவையாளர்களின் பணிக்கு மலர்ந்த முகத்துடன் நாம் அனைவரும் உதவுவது எங்கள் அனைவரினதும் இன்றியமையாத கடமையாகும்.

 

ஆக்கம் :- மகேசன்  புலந்திரன்