குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஒரு பலம் பொருந்திய சமூகத்தின் கட்டமைப்புக்கு ஒன்றே இனம், ஒன்று திரண்டால் அதுவே வெற்றி, எல்லோரும் ஒரே அணியில் இணைந்தால் உருவாகுவதே பலமான சமூகம் இவையே ஐக்கியத்தின் வலிமை என்னும் வில்லியம் ஹறிங்ரன் அவளின் வரிகள் எவ்வளவிற்கு எம்மவர் மத்தியில் வேர் ஊன்றி உள்ளது என்பதை சற்று விரிவாகப்பார்ப்பதே இவ் ஆக்கத்தின் நோக்கமாகும்.

கல்வி அறிவை மேம்படுத்தி அறிவுள்ள ஒரு சமூகமாக எங்கள் கிராம மக்களை வழிப்படுத்திய சிற்பி மறைந்த திரு. பொன்பரமானந்தர் அவர்கள். வீடுகளிற்க்குச் சென்று மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி அறிவூட்டிய பெருந்தகை. எந்த வித உதவிகளும் இன்றி தற்துணிவு மிக்க அந்த மனிதர் தனது சொந்த முயற்சியால் ஆரம்பித்த கல்வி நிலையம் குரும்பசிட்டியில் பிறந்த அனைவருக்கும் அறிவூட்டிய ஆலயம். அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை பாடசாலையைத் தனது அயராத உழைப்பால் கட்டிக்காத்த அந்தப் பெருந்தகையின் முயற்சிக்கு எம் ஊர் மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், சமூக முன்னேற்றத்திற்காகவும், இடர் பட்டவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் கூட்டாகவோ அல்லது தனியாகவோ உதவுவதற்கு எல்லோரும் உழைத்தார்கள். இது எங்கள் கிராமத்தின் வரலாறு. இவை எல்லாம் கல்விச் செல்வத்தை எம்மவர்களுக்குத் தந்த மறைந்த திரு. பொன் பரமானந்தர் அவர்கள் முதற்கொண்டு பிறந்த மண்ணில் இருந்து இடம்பெயர்வு என்னும் அவலம் அரங்கேறும் வரை கண்கூடகாக் நாம் கண்ட உண்மையாகும்.

ஒரு சமூகத்தை தன் சிறந்த ஆழுமையின் கீழ் நிறுத்தி குரும்பசிட்டிக் கிராமத்தை கலை, இலக்கிய, சமய நெறிமுறைகள் தவறாத ஒரு சமூகமாக உருவாக்கிய மறைந்த எமது ஊர்ப்பெரியார் ஈழகேசரி நா. பொன்னையா அவர்கள். தன் வாழ்க்கையில் வறுமையை அனுபவித்து பல இடர்களைக்கடந்து தன் அயராத உழைப்பால் உயர்ந்தது மட்டுமல்லாமல், தன் பொருளாதர வலுவை தன் கிராமத்திற்கு உரமாக இட்டே எங்கள் மண்ணை மற்றயவர் பெருமைப்படக் கூடிய அளவிற்கு உயர்த்தியவர். ஏற்றத் தாழ்வு இன்றி கடமைபுரியும் சாணக்கியம் நிறைந்த இப் பெருமனிதர் தன் திறமையால் எல்லோரையும் சமனாக மதிக்கும் ஒரு காந்தியவாதியாக வாழ்க்கையில் மற்றயவர்க்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர். சன்மார்க்க சபை என்னும் அறிவாலயத்தை உருவாக்கி ஊரில் அனைவரையும் பல காலங்களாக ஒரு குடையின் கீழ் நிறுத்திப் பொதுப்பணியாற்றியவர். 

குரும்பசிட்டிக் கிராமத்தில் இலக்கிய, சமய, விளையாட்டுத் துறைகளில் முத்திரை பதித்த ஒவ்வொரு நிறுவனங்களின் முன்நேற்றத்துக்கும் முதுகெலும்பாக இருந்தவர்கள் எங்கள் கிராமத்தின் மதிநுட்பம் நிறைந்த திறமைசாலிகளும், துடிப்புள்ள இளைஞர்களும், அவர்களிற்கு பின்புலமாக நின்ற எங்கள் ஊரின் தனவந்தர்களுமே ஆவார்கள். சடுதியாக முன்னேற்றம் கண்ட ஒரு சிறு கிராமத்தின் தீவிர வளற்சிக்கு தங்கள் வருவாயை உரமாக இட்ட பல சிறுதொழில் வல்லுனர்களையும் எங்கள் கிராம மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

குரும்பசிட்டியின் வரலாற்றில் பெரும் செல்வந்தவராகவும், கல்வி அறிவுபடைத்தவராகும், பொதுநல நோக்கில் அக்கறை கொண்டவராகவும், அரசியல், பொருளாதார நிலைகளில் வலுவான ஒரு மனிதராகவும் வாழ்ந்த மற்றுமொருவர் மறைந்த திரு பூ. சு. நடராஜா அவர்கள். தனது வலிமையை எங்கள் சமூகத்திற்கு அற்பணம் செய்த இந்தப் பெரியவர் எங்கள் கிராமத்தின் சரித்திரத்தில் வாழ்ந்த உதாரண புருசர்களில் ஒருவர். ஆழ்ந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட இவர் பொது நல சேவையின் மூலமாக எம்மவர்கள் துயர்துடைத்தவர். அரசியலில் தனது வலிமையைப் பயன் படுத்தி எங்கள் ஊருக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தித்தந்;தவர். தனக்கு கை நழுவிப்போன கல்வியை மற்றவர் கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது தன்னாலான அனைத்து உதவிகளையும் புரிந்து அடுத்தவரை உயர்த நிலையில் வைத்து மகிழ்ந்தவர். உதவி உறவினருக்கென்றால் என்ன ஊரவருக்கு என்றால் என்ன, தேவையின் இடமறிந்து வழங்கும் பண்புள்ள இந்த மனிதர் வலுவான ஒரு சமூகமாக எம்மவர் உயர்ந்திட உரமிட்ட குரும்பசிட்டியின் கொடை வள்ளல்களில் குறிப்படககூடியவராவார்.

பொது நலனில் அக்கறை கொள்ள பரந்த மனமும், சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய தைரியமும், விமர்சனத்தைத் ஏற்றுக்கொள்ளும் மனத்திடனும் ஒருவருக்கு அவசியமாகின்றது. இதை கல்வியினால் மட்டுமல்ல வாழ்வின் அனுபவத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும். எங்கள் கிராமத்தின் இன்றய வரலாறே இவற்றுக்கு நல்ல உதாரணமாகும். ஊரை உருக்குலைத்து எம்மவர் தலைமுறை தறைமுறையாக வாழ்ந்த வாழ்விடங்களை கற்குவியலாக்கி, ஏதுமறியா எம்மவர் உயிர்களை காரணமேதுமின்றிப் பறித்தபோதும் மீண்டும் வாழையடிவாழையாகத் தளைத்தெழுந்து நிற்கதியாக நிற்போருக்கெல்லாம் பல சோதனைகள் மத்தியிலும் பொதுப்பணி செய்துவருவது எங்கள் சமூகம்.

உறவினரும் அயலவரும் கூட்டமாக வேலியே அற்ற வீடுகளில் வாழ்ந்த கிராமத்து வாழ்வானது அடுத்தவரை யார் என்று தெரியாது வாழ்கின்ற ஒரு சமூகத்தில் இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுப்போன மனிதர்களாக நாம் வாழவேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. உயர்நிலையடைந்த சமூகத்தின் ஓட்டத்துடன் எம்வாழ்வையும் மாற்றி இருக்கின்றோம் அல்லது மாறுவதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்.

காலத்தின் கோலத்தால் நாடுகள் பல சென்று நம்மவர் வாழ்ந்திடும் இந்நாளில் வாழும் இடமெல்லாம் ஊரின்காற்று வீசிட வேண்டுமென்று சிந்தனை கொண்டவர்கள் எம்மவர்கள். புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் தாய் மண்ணின் பற்று எம்மனதில் ஆழப்பதிந்துள்ளதன் அடையாளமே இவை எல்லாம். ஊரே உருக்குலைந்த பின் தாய்மண் தெரியாது வாழும் ஒரு சந்ததிக்கு எங்களின் பின் புலம் அறிந்திட வளர்ந்து வரும் தொழில் நுட்பத்த்துறையினுடாக உலகெங்கும் வாழும் குரும்பசிட்டியர்களை இணையத்தால் இணைத்து வைத்திருக்கும் இளைஞன் திரு. சிங்கராஜா கௌரிதாசன். (பாலன் தாசன் என்னும் இரட்டையர்களாக ஊரில் நாம் அறிந்தவரில் ஒருவரான) கௌரிதாசன் தன் மண்ணின் மீது கொண்ட பற்றினால் தன் பொருளாதாரத்தை, உழைப்பை, நேரத்தை தன் தேசத்திற்கு வித்திடும் சக்தி கொண்டவர். தன் எண்ணத்தில் உருவான சிந்தனையின் வெளிப்பாடக குரும்பசிட்டிவெப்.கொம் என்னும் இணையத்தளத்தை உருவாக்கி எம்மர் அனைவரும் சந்திக்க களம் அமைத்துக் கொடுத்திட்ட இவரின் முயற்சி முன்னையவர் பாணியில் தனது வலிமையை தன் சமூகத்திற்கு பயன்படுத்தும்விதமானது போற்றுவதோடு, பெருமைப்பட வேண்டியதுமொன்றாகும். 

இன்று நாம் வாழ்கின்ற நாகரீகமடைந்தநாடுகளின் சமூக கலாச்சாரக் கட்டமைப்பானது பல ஆண்டுகளிற்கு முன்பே அந்த அந்த நாட்டு மக்களிற்க்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் சீரிய முறையில் கிடைக்கக் கூடிய வகையில் ஒழுங்கமைக்ப்பட்டு சம உரிமை பேணும் தன்மை கொண்ட அமைப்பினுள் நாங்களும் நுழைந்துள்ளோம். நாம் வாழுகின்ற இந்த மேலை நாடுகளிலெல்லாம் மனிதனின் அன்றாட வாழ்விற்குத் தேவையான வாழ்விடம், உணவு, மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பன எந்தத் தடையுமின்றிக் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த படியாயக கல்வி, தொழில், பொழுதுபோக்கு என்பனவற்றுக்கு காப்புறுதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இவை எல்லாம் தடங்கலின்றிக்கிடைக்க வளியேற்படுத்தப்பட்டிருக்கும் மேலை நாட்டு சமூகத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் வருமானவரியே முக்கிய முதலீடாகும். அத்துடன் இவ்விடயத்தில் ஒவ்வொரு நாட்டினதும் ஏற்றுமதி வருவாயும் முக்கிய பங்களிக்கின்றது. இவற்றினால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு வாரிவழங்கும் பெருந்தன்மை கொண்ட சமூகமாக மேற்கத்தைய நாடுகள் திகழ்கின்றன. நாகரீகத்தில் முன்னேறிய மேலை நாட்டு மக்களிடையே காணப்படும் நல்ல பண்பாக, தாம் வழங்கும் வரிபணத்துடன் தங்கள் பங்கு முடிந்து விட்டது என்று விட்டுவிடாமல் பல வறிய நாட்டு குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனியாகவோ அல்லது உதவி வழங்கும் அமைப்புகளின் மூலமாகவோ தங்கள் பங்களிப்பை வழங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது. 

பரந்து பட்ட முறையில் நாகரீகமடைந்து எல்லாவிடயங்களிலும் உயாந்து நிற்கும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, அனைத்து துறைகளிலும் கால் பதித்து கடுகதியில் முன்னேறி பல சாதனைகளைப்படைத்து வரும் எம்மவர்கள் அவைரும் நாம் கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால். அமைதியாக வாழ்ந்த சமூகமொன்று அல்லலுற்று அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றுக்கும் கையேந்தும் நிலையில் உள்ள எம் உறவுகளை நினைவில் கொள்ள வேண்டியது நல் இதயம் கொண்ட ஒவ்வொருவரினதும் கடமையாகும். 
பல நெருக்கடிகளிற்குள் இருக்கும் மக்களுக்கு ஒருவர் இருவரால் உதவுவது என்பது இயலாத காரியமாகும். ஆனாலும் காக்கும் கரங்களாக இயங்கும் ஸ்த்தாபனங்களிற்கு உதவும் உள்ளங் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். 

பல நாடுகளில் எம்மவர் புலம் பெயர்ந்து வாழ்கின்ற போதும் பல குரும்பசிட்டியர்கள் ஒன்றாக வாழும் கனடாவில் அபயம் என்போருக்கு அன்புக்கரம் நீட்ட குரும்பசிட்டி நலன்புரி சபை என்னும் அமைப்பைதத் தோற்றுவித்து பல காலமாக நலிவுற்றவர்களின் துயர் துடைத்துவரும் எம்மவர்கள், காலத்துக்கு காலம் கலை, இலக்கிய சேவைகளையும் செவ்வனே செய்து வருவது கண்கூடு. இவ் அறக்கட்டளை அமைப்பானது தனது பணியை மேலும் விஸ்தரித்து தேசம் எல்லாம் வாழும் கருணை உள்ளம் கொண்ட குரும்பசிட்டியர்களை அரவணைத்து எம்மவர் துயரகற்ற துணை புரிய வேண்டும். ஒவ்வொருவரும் தம்மகத்தே கொண்டுள்ள திறமையையும், வலிமையையும், துணிச்சலான செயற்பாடுகளையும் ஐக்கியத்துடன் சமூகப்பணிக்கு அர்பணித்து எம் மக்களை பலம் கொண்ட சமூகமாக உருவாக்கிடவேண்டும். காலத்தின் தேவை கருதி அனைவரும் இம் முயற்சிக்கு ஐக்யத்துடன் துணைபுரிவார்கள் என்பது திண்ணம்.


நன்றி - பொன்வயல் 2008 மலர்

(இவ் ஆக்கம் கனடா குரும்பசிட்டி நலன்புரிசபையின் பொன்வயல் 2008 மலரில் வெளிவந்தது. )

ஆக்கம் - மகேசன் மைந்தன்