குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

எல்லாத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களை தன்னகத்தே கொண்ட எம் காதல்கிராமம் குரும்பசிட்டியில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த பலர் வாழ்ந்திருக்கின்றனர்.தமிழர்களின் பண்டையகாலத்து விளையாட்டு முதல் நவீன விளையாட்டுகள்வரை எமதூரில் விழையாடப்பட்டுள்ளன.

ஆரம்பகாலத்திலிருந்து இடப்பெயர்வு காலம்வரை குரும்பசிட்டி மக்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சிப்போக்காகவே காணப்பட்டிருக்கின்றது. ஆரம்பகாலத்தில் கலைவளம் தெய்வபக்தியுடன் வாழ்ந்த எம்மவர் திண்ணைப்பள்ளிக்கூடப்படிப்பு, சுறுட்டுத்தொழில், தோட்டவேலை ஆகியவற்றின் பின்பும் ஓய்வுநேரங்களிலும் தமிழரின் பண்டைக்கால மரபுவிளையாட்டுக்களை விளையாடி வாழ்ந்திருக்கின்றனர். அதில் குறிப்பிட்டுக்கூறக்கூடியவை அன்னஊஞ்சலடுதல், போர்த்தேங்காய் அடித்தல், கிளித்தட்டு, பட்டம் விடுதல், மாட்டுச்சவாரி போன்றவை. இவை இன்றைய எமதுஊர் இளையவர்களுக்கு சொந்தமற்ற விளையாட்டுக்கள் ஆகிவிட்டன.புதுவருடக்கொண்டாட்டம் மற்றும் பண்டிகைக்காலங்களில் அன்னஊஞ்சலடுதல் தனித்துவமான விளையாட்டாக விளையாடப்பட்டுள்ளது. 

குரும்பசிட்டி மக்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பாடசாலைகளுக்கும் எமதூர் மன்றங்களும் தனி இடம் பிடித்துள்ளன. உயர்வர்க்கத்தினரின் பிள்ளைகள் மட்டுமின்றி பாமரமக்களும் விளையாட்டுத்துறையில் முன்னணியில் திகழ்ந்திருக்கின்றனர். யாழ்மாவட்டத்தில் மட்டுமின்றி முழு ஈழத்திலும் எம் ஊரை முதலில் பிரகாசிக்கச்செய்தவர்கள் நல்லையா சகோதரர்கள். இவர்களைத்தொடர்ந்து எமதுராரவர் பலர் அயற்கிராம பிரபல பாடசாலைகளுக்காக அணிசேர்த்திருந்தனர். உதைபந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளிலும் பிரகாசித்தவர்கள் சிலரை நினைவுகூரலாம். (நா.பத்மநாதன், த.இரத்தினவேலு மு.க.சுப்பிரமணியம், மு.சுவாமிநாதன், க.குகப்பிரகாசம், ஆ.சி நடராஜா, ந.காளிதாசன், நா.மகாலிங்கம் க.சிவதாசன், செ.லோகதாசன், க.குமாரமுர்த்தி, சி.தயாபரன், மனோ.ஸ்ரீதரன், நா.நிர்மலா, அ.யோகமலர் மு.சறோஐனி, க.சிவசக்தி, இ.சத்தியராணி, ந.பவானி. )

க.சத்தியமுர்த்தி, க.பஞ்சலிங்கம் ஆகிய இருவரும் 1958 இல் இந்தியாசென்று யாழ் பாடசாலை அணிசார்பாக கிறிக்கெட்டில் பெரும் சாதனைபடைத்து எம் குரும்பசிட்டிக்கு பெருமை சேர்த்திருந்தனர். நா.பத்மநாதன், ந.காளிதாசன், ஆ.சி நடராஜா, செ.லோகதாசன் போன்றோர் விளையாட்டுத்துறையிலுள்ள நெளிவு சுழிவுகளை தெளிவுபடுத்தி ஊக்கம் கொடுத்து பல இளையவர்களை விளையாட்டுத்துறையில் புகுத்தியிருக்கின்றனர். 

உதயதாரகை மன்றம்1958இல் ஆரம்பித்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் தோடர்ச்சியாக சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக(இடப்பெயர்வுவரை) முன்னெடுத்துவந்தமை யாழ்மாவட்டத்தில் வேறு எந்தக்கிராமத்துக்கும் இல்லாத பெருமையை குரும்பசிட்டிக்கு தேடித்தந்துள்ளது. கிராமத்தின் பல பகுதிகளில் சிறிய விளையாட்டுமைதானங்களை அமைத்து ஊரவர் கிளித்தட்டு, பிள்ளையார்பந்து, ஊதைபந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்திருக்கின்றனர்.விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது வசதிகொண்ட விளையாட்டுமைதானம். அதை மனதில் கொண்டு 1975 காலங்களில் கிராமமுன்னேற்றச்சங்கத்தின் முழுமுயற்ச்சியால் மத்திய பொது விளையாட்டுமைதானம் எமதூரின் மேற்குப்பகுதியில் உருப்பெற்றது.புலம்பெயர்நாடுகளிலும் குரும்பசிட்டியைச் சேர்ந்த பலர் இன்றும் விளையாட்டுத்துறையில் ஆர்வம்காட்டி தம் சந்ததியினருக்கும் ஊக்கம் கொடுத்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
 

”நோயற்ற வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியம்”

 

 ஆக்கம்:நேசன்மகன் 15-10-2007 / 21:15