குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

கவிஞர்கள், கல்விமான்கள், செல்வந்தர்கள், கலைஞர்களைத்தந்த சிவந்தமண்- வீரம்செறிந்த எமதூர் குரும்பசிட்டியில் தேசவிடுதலையை நேசித்த பல வீரர்கள் வாழ்ந்திருக்கின்றனர். நாம் புலம்பெயர்ந்து தூரத்தில் வாழ்ந்தாலும் எம்முடன் ஒன்றாக வாழ்ந்த காவல் தெய்வங்கள் எனக்கருதக்கூடியவர்கள் எம் ஊரைச் சேர்ந்த விடுதலை வீரர்கள்.இவர்கள் தாயகவிடுதலைக்காய் இளம் பருவத்திலேயே தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.

எம் பொன்வயலினுள் இராணுவத்தின் கனத்த கால்கள் நுழைந்து எம் ஊர்க்காற்றில் இராணுவச்சுவாசம் பட்டு எம்மூரின் தனித்துவத்தை குலைக்க முயன்ற போது எந்தவித புகழையோ, பாராட்டையோ, பட்டத்தையோ எதிர்பாராது எம் மண்ணில் நாம் உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காய் ”செய் அல்லது செத்து மடி” எனப்புறப்பட்ட வீரர்களை நாம் மறந்தால் அது எம் தாயை மறந்ததற்கு ஒப்பாகும்.

எம்மூர் குரும்பசிட்டி ஊடாக அதிகாலையில் (17-01-1986 அன்று) இராணுவம் ஊடுருவி முன்னேறிய போது திரு. குமாரவேல் உட்பட உறக்கத்தில் இருந்த பல எமதூர் மக்களை ஒரே நாளில் இழந்தோம். தூரத்திலிருந்து செய்தி கேட்டு அதிர்ந்தவர்கள் பலர் இன்றும் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 

மறக்க மனம் மறுக்கின்றது!

கும்மி, கலாதர், விக்கி, ஜெயகலா, அச்சி, ஜெயகாந்தன்.... என்று வீரவரலாறு படைத்த எம் ஊர் வீரர்கள் பலர், பல விடுதலை வெற்றிக்குப் பின்பலம் சேர்த்தவர்கள் இவர்கள் என்பது உண்மை. எம் ஊர் இளைஞர்கள், யுவதிகள் தாயக விடுதலைக்காய் தம்மை இணைத்து இன்றும் தம் புனிதப்பயணத்தை தொடர்கின்றனர். 

எம் தாய்மண்ணில் இவர்கள் கொண்ட பற்றுதியால் அச்சம் எமக்கில்லை! அடிமை நாம்மில்லை!! என்று எம் சந்ததிகள் மகிழ்வாய் வாழ தம் இனிய வாழ்வை மறந்தவர்கள் இவர்கள். தாய்மண் விடுதலைக்காய் எமதூர் குரும்பசிட்டியும் தன் விலையைக் கொடுத்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

ஒரு இனத்தின் கலாச்சார வடிவங்களை, மொழியை அழிப்பதன் மூலம் அந்த இனத்தை அழித்து விடலாம் இது வரலாறுகண்ட உண்மை.


”ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பதை விட வீழ்ந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை”

 

 ஆக்கம்:நேசன்மகன் 11-09-2007 / 10:15 am