குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஒன்றே மதம், ஒன்றே மொழி, ஒருவரைப் போலவே மற்றவர் தோற்றம் என குரும்பை நகர் என்னும் ஒரு கூட்டில் வாழ்ந்த எம் மக்கள் திக்கெல்லாம் சிதறி வாழ்ந்தாலும் நாம் நடந்த சிவந்த மண்ணின் பாதையைத்திரும்பி (செய்மதிவழியாக) ப்பார்த்தால்… இதயம் ஒரு முறை அழும். குடும்பம் என்னும் கோட்டைக்கடந்து, கிராமம் என்னும் வட்டத்தில் வாழ்க்கை நடத்தியவர்கள் எம்மவர்கள். இரவிரவாக விளித்திருந்து ஊரைக்காத்தவர்கள்.

மற்றவர் வாழ்வில் வரும் இன்பம், துன்பம் இரண்டிலும் தங்களை இணைத்தவர்கள். அடுத்தவருக்கு அவலம் என்றால் அடுத்த கணம் அங்கிருக்க இரு வீட்டு எல்லைக்கிடையே புகுவழிவைத்து வாழ்ந்வர்கள் எமது மக்கள்.

     கலைக்கும் கல்விக்குமாக எம்மவர் தம்மையே அர்ப்பணித்தவர்கள் எம் கிராம மக்கள். கலைத்தாயின் அவதாரங்களாக பிறப்பெடுத்து சிற்பம், சித்திரம், சங்கீதம், நடனம், கவிதை, நாடகம் என்று நீண்டு செல்லும் நீரோட்டத்தில் மக்களை நனைய வைத்தவர்வர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு கலையை சகோதரர்களாக கற்று பல ஆண்டுகளாக சங்கீத மேடைகளில் (மனோரஞ்சிதமாக) த்திகழ்ந்தவர்கள் “சாராதா பாரதா” என்னும் சகோதரிகள். இவர்களின் பின் இன்றும் இப்பணி தொடர எமது ஊர்ப் பெயர் மிளிர பரதத்தில் இருவாராக மிளிர்பவர்கள் ”கீதா சசி” என்னும் எம்மவர் பிள்ளைகள்.

கலையிலும் கல்வியிலும் எம்மவர் மிளிரக் காரணம் விடாமுயற்சியும், பெற்றோர்களின் அயராத பங்களிப்பும் என்றால் மிகையாகாது. ஒருவரின் முன்னேற்றத்தையும், திறமையையும் கண்டு மற்றவரும் அவ்வழி தொடர பாதை அமைத்தவர்கள் எம்கிராமத்தவர்கள்.

           நடிப்புக்கு உயிர் கொடுத்த “கலைப்பேரரசு” எங்கள் கிரமத்தில் பலரை நாடிகர்களாக்கிய பெருமைக்குரியவர். மாவைக்கந்தனுக் அளித்த “தாளக்காவடி” யில் எம் ஊர் சிறியவரை நாடகக்கலைக்குள் புகுத்தி பெருமை கண்டவர் மறைந்த ஆசிரியர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள்.

              உடல் இருக்கும் வரை கலை தம்மில் பொதிந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்வர்கள் எம் ஊர் கலைஞர்கள். உடலின் இயக்கம் இருக்கும் வரை தம்மால் இயன்றவரை கலைவாழ உயிர் கொடுத்வர்கள். “இலட்சிய வேட்கை”யாகி பல தங்கப் பதக்கங்களை வென்ற நாடக்த்திற்கு ஆணிவேராகத்திகழ்ந்தவர் மறைந்த மு. திருநாவுக்கரசு அவர்கள். ஒருகையை அசைக்காது மறுகையால் சித்திரம் வரைந்ந்து கண்ணுக்கு விருந்தளித்தவர் இரசிகமணி கனக செந்திநாதன். இறந்த மரத்திதை சிற்பமாக உயிர் கொடுத்து இலங்கை முழுவதும் தன்புகழ் நாட்டியவர் கலாகேசரி தம்பித்துரை அவர்கள்.

கலையிலே இவர்கள் புகழ்நாட்ட கல்வியில் பல எம்மவர் கொடிநாட்டியுள்ளார்கள்.     விலங்கு மருத்துவத்துறையிலே பேராதனைப் பல்கலைக்களகத்தில் அதிஉயர் விருது பெற்ற கலாநிதி வ. புவனேந்திரன் அவர்களின் பெயர் இன்றும் “பொன்”எழுத்துக்களால் அங்கு பொறித்து வைக்கப்பட்டுள்ளது.இப் பெருமைக்குரியமைந்தன் பிறந்தது எங்கள் மண் குரும்பசிட்டி.

சட்டத்துறையில் சிலரே எமது கிராமத்தில் இருந்தார்கள், அந்தக் குறையை நிறைவு செய்ய ஒரே குடும்பத்தில இருவராக புறப்பட்ட நிசந்தன் நிலக்சன் என்ற இருவரும் சட்டத்தரணிகளாகி தாம் கைப்பிடித்த துணைவியர்களையும் சட்டத்தரணிகாளகவே தேர்ந்தெடுத்து ஒரு சட்டவாளர்களின் குடும்பமாக பெருமை பெற்றுள்ளார்கள்.

மருத்துவமும், பொறியியலும் என்ற கண்ணேட்டம் மாறி நவீன தொழில்நுட்பத்தில் காலடி வைத்து அதன் உச்சிக்கே சென்று விட்டார்கள் எங்கள் ஊரின் மைந்தர்கள். தென்கிழக்காசியாவில் கணணி தொழில் நுட்பத்தின் இதயமாக விளங்கும் சிங்கைநகரில் உலகின் பெரும் மென்பொருள் நிறுவனத்தில் நெறிப்படுத்தல் முகாமையாளராக எம் ஊரவர் ஒருவர் பணியாற்றி உள்ளது என்றால் அது எம்மவர் அனைவருக்கும் பெருமையாகும். இன்னுமோருவர் சர்வதேச வர்த்தக தொழில் நுட்ப நிறுவனத்தில் மேற்கு உலகநாடு ஒன்றின் கணணித் தொழில்நுட்ப ஆலேசகராக பணியாற்றுகின்றார்.

                     அமரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் தாவர ஒட்டுண்ணியியல் ஆராச்சி புரிந்து வெளியிட்ட நூல் பல்கலைக்கழக நூல்நிலையங்களின் பாவனைக்காக இன்று ஜரோப்பா முதல் தென் அமரிக்காவின் பிறேசில் நாடு வரை பரந்து உள்ளது அதற்கு உரிமையுள்ளவர் பிறந்த இடம் குரும்பசிட்டி. மற்றும் ஒரு எங்கள் உறவு அமரிக்கர்களுக்கு பாடம் கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்.

                       இவை எல்லாம் எங்கள் கிராமத்தின் முதல் தலை முறை காட்டிய பாதையைத் தொடர்ந்த கதை, இது இன்னும் தொடர் கதையாகத் தொடரவேண்டும்…….இன்னும் பல சகாப்த்தங்களை எங்கள் அடுத்த தலைமுறை படைக்க வேண்டும், அதைக்காண குற்றுயிராக இருக்கும் எங்கள் கிராமம் புத்துயிர் பெற்று மலரவேண்டும்.

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு….
அதை மதிப்பது எம்மவர் பொறுப்பு… 
 

ஆக்கம் : மகேசன் மைந்தன்

( இவ் ஆக்கத்தின் இடையே கூறப்பட்டவர்களில், இணைக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களே எங்கள் கரம் எட்டியவை )

சிறுகுறிப்பு:: இவ் இணையத்திற்காக தொடர்ந்து பல ஆக்கங்களை எழுதிவரும் திரு.மகேசன் மைந்தன் அவர்களுக்கு குரும்பசிட்டிவெப்.கொம் தனது மனமார்ந்த நன்றிகளையும், தொடர்ந்தும் பல புதிய ஆக்கங்களை எழுத எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

UR Admin - Kurumbasiddyweb.com - 27.7.2007