குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய… என்றெல்லாம் பெருமை பேசியே காலத்தை கடத்திநோம். இதனால் கால நீரோட்டத்தில் எதிர்நீச்சல் அடிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததே அன்றி உருமாறிக் கொண்டு ஒடும் உலகத்துடன் நாங்களும் பங்காளிகளாக மாறாது நேரத்தை வீணடித்தோம்.

மின்சாரம் இருந்தும் அதன் பாவனையை முழுமையாகப் பயன்படுத்தினோமா என்றால் இல்லை. விறகு வெட்டியே உணவு சமைத்தோம். இன்று மின்சாரம் இல்லை என்றால் எம்மால் வாழமுடியாத நிலைக்கு வந்தபின் தான் முன்னர் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என விட்ட தவறுக்காக மனம் வருந்துகிறோம். எமக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதனால் கிடைக்கும் பயனை சிறந்த முறையில் முழுமையாக கையாளத் தெரிந்து வைத்தல் வாழ்க்கைக்கு அவசியம். அல்லது போனால் இருந்தும் உபயோகமற்றதாகிவிடும் ஒரு உபகரணமாகவோ அல்லது, அதை தவறாகப் பயன் படுத்துவதனால் தனக்கும், ஏன் மற்றவர்களுக்கும் கெடுதி விளைவிப்பதில் தான் முடியும். ஆனால் இவற்றை மாற்றியமைக்க இன்னும் காலம் கடந்து விடவில்லை. 

இன்றைய நவீன உலகில் எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இலத்திரனியல் இணைய ஊடகங்களை நாம் எடுத்துப்பார்ப்போமேயானால் இவற்றின் ஆதிக்கம் எம்வாழ்வில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள் எமக்குப் புரியும். வங்கிக்குப்போகமல் பண மாற்றீடுகளும், தபாற்கந்தோருக்குப் போகாமல் தபால்பரிமாற்றமும், கடைக்குப் போகாமல் உணவு(ப்பொருட்கள்) வீட்டுக்கு வருதலும், அலுவலகத்திற்குப் போகமலேயே வீட்டில் இருந்து கடமையை செய்வதும், விமானச் சீட்டை வீட்டில் இருந்தே கொள்வனவு செய்வதும், இன்னும் எத்தனை…. இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக கணணியும் இணையமுமே உள்ளன. 

 இங்கு இணையத்தளங்கள் பற்றிய எமது பார்வையைத் திருப்புவோமானால், சுமார் 50 வருடங்களின் முன்பு இருந்தே இதன் பாவனை குறிப்பிடப்பட்ட அளவில் இருந்து வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் அரச துப்பறியும் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் உபயோகப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அலுவலகங்களிலும் பின்னர் சாதாணமக்களிடையும் பாவனைக்கு வந்தது. கடந்த 17 வருட காலத்தில் அபார வளர்ச்சி கண்ட இலத்திரனியல் ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகவே அமைந்து விட்டன. ஆரம்ப காலங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் உபகரணமாக பார்க்கப்பட்ட கணணி இன்று எமது இல்லங்களில் சாதாண பாவனைப்பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதன் உபயோகம் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதும் இதன் பாவனை எல்லோர்மத்தியிலும் எவ்வாறு வேர் ஊன்றி உள்ளது என்பதும் சிந்தித்துப் பார்க்கபடவேண்டி ஒன்றாகும். 

தொலைபேசியை எடுத்துக் கொண்டாலோ வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் உபயோகப் படுத்துகின்றோம். தொலைக்காட்சியை எல்லோரும் பார்க்கின்றோம்., அதேபோல பத்திரிகைகளையும் எல்லோரும் வாசிக்கின்றோம்., இந்த எல்லாம் ஒருங்கே தன்னகத்தே கொண்ட கணணியை அல்லது இணையத்தை உபயோகிக்க அல்லது கற்றுக்கொள்ள பின்னிற்பது கவலைக்குரியது ஒன்றாகும். இது சிறுவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ என உருவாக்கப்பட்டதோ ஒன்றல்ல.

கற்பதற்கோ வயது, காலம், நேரம் என்று ஒன்றும் வரையறை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதையும் எப்போதும் கற்றுக் கொள்ள முடியும். ஆர்வம் ஒன்றே தேவை. இதற்கு உதாரணமாக சில நாட்களுக் முன் கணணி கல்வியை கற்பிக்க ஆசிரியர் தேவை என்ற விளம்பரம் ஒன்று வந்திருந்தது. மாணவர்கள் யார் என வாசித்த போது சிறு அதிர்ச்சியும் காத்திருந்தது. 80முதல் – 90வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனப்போடப்பட்டிருந்தது. அங்கு அவர்களின் வயதைவிட ஆர்வமே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அது பாரட்டப்படவேண்டியதுமாகும்.

எம்மவர் மத்தியில் கணணியின் பாவனை வளர்சிஅடைந்து வருவது பாராட்டப்படவேண்டியது ஒன்றாகும். ஆனால் இன்னும் பெருகவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இவ் இணையத்தளத்திலேயே தற்போது நேயர்கள்பதிவேட்டில் நாம் கண்டிருக்கும் எமது ஊர் பெரியவர்களின் தன்னார்வ முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. இதனையே ஏனையவர்களும் தொடர வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிரிந்தவர் இணையவும், வாழ்நாளிலே காணதவர் உறவு பாரட்டவும், தெரிந்தவர் நட்பைப்பேணவும் இவ் இணையத்தளம் பாலம் அமைப்பது போல, மேலும் எங்கள் கிராமத்தின் தொன்மியங்களை எடுத்துரைக்க பெரியோர் வரவு அவசியமானது ஆகும். பலர் இங்கு இணைந்தால் தான் பயன் பெரிதாகும்., ஊர் ஒன்று கூடினால் தான் தேர் இழுக்கலாம். 

எங்கும் எதிலும் நன்மையும் தீமையும் இருக்கவே செய்யும். அசுர வளர்சி அடைந்து வரும் இலத்திரனியல் ஊடக வாழ்வில் எவ்வளவு எமக்கு பயன் இருக்கிறதோ அதே போல அதன் தவறான உபயோகத்தால் பல தீமைகளும் நிகழ்வதை நாம் நாளாந்த வாழ்வில் காண்கின்றோம். எதையும் எமக்கு நன்மை தரக்கூடிய வகையில் உபயோகிப்பதன் மூலம் எமது வாழ்வை வழமாக்கிக் கொள்வோமாக.


                                                        - Electricity is a good servant, but a bad master -


இவ் ஆங்கிலப் பழமொழியை அறியத்தந்தவர், 9ம் வகுப்பில் விஞ்ஞானம் கற்பித்தவரும், எம் கிராமத்துப் பெரியார்களை அன்புடன் நேசித்தவருமான மதிப்புக்குரிய ஆசிரியர். இளவாலையூர் நடராஜன்.


 

ஆக்கம் : மகேசன் மைந்தன்