குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி மீள்  எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா ஆவர்களுக்கு கடந்த 03.12.2011 அன்று யேர்மனியில்  டோட்மூண்ட் நகரில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வினை குரும்பசிட்டி மக்கள் மற்றும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்மிழ் சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

சரியாக மதியம் ஒரு  மணிக்கு அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் மருமகள் திருமதி கடம்பேஸ்வரி தங்கராஜா அமரரின் திரு உருவப் படத்திற்கு குத்துவிளக்கினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். 

தொடர்ந்து ஆன்மீகத்தென்றல். தம்பி.புவனேந்திரன் அவர்கள் தேவாரம் பாடி அவர் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்தார். மக்கள் அனைவரும்  எழுந்து நின்று அமரரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

தொடந்து வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (கண்ணன்) அவர்கள்  அஞ்;சலி உரையை ஆரம்பித்து வைத்தார். அவர் தன் உரையில் அமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் குரும்பசிட்டிக்கு மட்டும் உரியவராக அன்றி. அல்லலுறும் மக்களின் அனைவரதும் தொண்டனாகவும் வாழ்ந்தார். குறிப்பாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்தில் வாழும் மாணவர்களின் கல்வியில் பெரிதும் அக்கறை காட்டினார். யாழ்.தினக்குரல் பத்தரிகையில்  கருணைப் பாலம்  என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி அதன் முலம் ஆயிரம் ஆயிரம் நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவினார். அவருடைய மனித நேயத்திற்கு யாழ் குடா நாடே தலைவணங்கியது என்றார்.

அடுத்து நாடகக் கலைஞர் திரு.செ.கதிர்ச்செல்வன் அவர்கள் அவருடைய நாடகக்கலை ஆர்வம் பற்றியும், தனக்கும் அவருக்கும் உள்ள கலை உறவு பற்றியும் எடுத்துக்கூறி, அவர் ஆரம்பித்து வைத்த கருணைப் பாலத்திற்கு வருடா வருடம் உதவவேண்டும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு. அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி செய்தார்.

திரு.இ.செல்வராஜா அவர்கள் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் எழுதிய கவியஞ்சலியை அங்கு வாசித்து அஞ்சலி  செய்தார்.

தொடர்ந்து ஆசிரியர்.திரு.சு.லோகநாதன் அவர்கள் தான் வாயாவிளான் மத்திய மாகாவித்தியாலையத்தில் படிப்பித்த காலத்தில் அவருடன் ஏற்பட்ட நட்பு உறவினையும், மரணத்திற்கு சில தினங்களுக்கு முன் அவர் தன்னுடன் தொடர்பு கொண்டு உரையாற்றியபோது குரும்பசிட்டியின் மீள் எழுச்சி விரைவு படுத்தப்படவேண்டும் என்பதனை வலியுத்தியதாகவும், அவர் தன்னுடன் மட்டுமல்லாது புலம் பெயர்ந்து வாழ்கின்ற பலருடன் இவ்வாறு அச்சில தினங்களுக்குள் உரையாடிதாகவும் குறிப்பிட்டு அவருடைய எண்ணங்கள் கனவுகள் நிறைவு செய்யப்படுவதே அவருக்குச் செய்யும் அஞ்சலி என்றார்.

தொடந்து  வெற்றிமணி பத்திரிகையின் அறிவிப்பாளர் திரு.சக்திவேல் அவர்கள் தான் குரும்பசிட்டியைச் சேர்ந்தவன் அல்ல, இருந்தாலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளக் காரணம் அவர் எனது ஊரான வடமராட்சி மக்களுக்கு கருணைப்பாலம் மூலம் செய்த அளவு கடந்த உதவிளே என்றார்.

அடுத்து நாடகக் கலைஞன். திரு ரவி அவர்கள் அமரர். ஆ.சி.நடராஜா அவர்களின் மேலும் கீழும் தாள லய நாடகத்தைக் குறிப்பிட்டு அவர் கலையுள்ளத்தை வியந்து அஞ்சலி செய்தார்.
இறுதியில் திருமதி.கடம்பேஸ்வரி தங்கராஜா அவர்கள்  இந்நிழ்வினை ஏற்பாடு செய்த குரும்பசிட்டி மக்களுக்கும் வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுக்கும் நன்றி தெருவித்தார்.  அமரர் ஆ.சி நடராஜா அவர்களின் அஞ்சலி நிகழ்வில் குரும்பசிட்டி மக்கள் பலரும் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செய்தது அவர் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தினைக் காட்டியது.


தகவல்:வெற்றிமணி-யேர்மனி