Print
Category: எம்மவர்பக்கங்கள்
Hits: 3042

10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது. அபிராமி பட்டர் தான் அமாவாசையில் நிலவைக் காட்டியவர் ஐங்கரனுமா? (படங்கள் இணைப்பு)

முதலில் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் விழா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெகநாதன்; அவர்களின் மனம் உருக வைக்கும் இனிமையான தழிழ்த்தாய் வாழ்த்துடன் மிக பிரகாசமானது.

அடுத்து திரு கௌரிபாலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதில் குரும்பசிட்டியின் கலை இலக்கியப் பாரம்பரியம், அதில் சன்மார்க்க சபையின் பங்கு, இன்றைய தலைமுறையில் கவிஞர் ஐங்கரனின் படைப்பிலக்கிய சிறப்புகளை எடுத்தியம்பியதுடன் விருந்தினர்களையும், ஏனையோரையும் வரவேற்று பேசினார்.

தலைமையுரையை ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் திரு.ச.வாமதேவன் அவர்கள் அருமையாக நிகழ்த்தி கவிஞர் ஐங்கரனை வெகுவாக பாராட்டி அவரின் பல் வேறு தரப்பட்ட சிறப்புகளை எடுத்தியம்பினார். கவிஞனாக, கணினி விரிவுரையாளராக, வங்கியாளராக, மனவளக்கலை ஆசிரியராக அவர் பல்வேறு துறைகளிலும் சிறப்பு பெற்று வருவதாகவும், அண்மையில் மாவட்ட ரீதியில் நடை பெற்ற கவிதை, பாடலாக்கம், சிறுகதை ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலிடம் பெற்று தன் திறமையை நிரூபித்திருப்பதாகவும் குறிப்பிட்டு, தனக்கும் அவருக்கும் இடையான தொடர்பை விளக்கினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த வவுனியா நகர சபை உப தலைவர் திரு. ஆ.ஆ ரதன் அவர்கள் கவிஞரை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். அவரின் உரை அனைவரையும் கவர்ந்தது. அத்தோடு ஐங்கரனை புது யுகக் கவிஞன் என பாராட்டியதோடு. அண்மையில் நடைபெற்ற பிரதேச கலை இலக்கி விழாவில் சுமார் 1000 பேர் கூடிய அவையினை தன் கவிதையால் அமைதியாக்கி கட்டுப்படுத்தி குறிப்பாக மாணவர்களிடமிருந்து அதிக கைதட்டல்கள் வாங்கியதை பார்த்து இரசித்ததாக குறிப்பிட்டார். இவ்வாறான கவிஞர்கள் தான் எம் நாட்டுக்கு தேவையானவர்கள் என்று அவரின் பணி தொடர வாழ்த்தினார்.

அடுத்து அருமையான ஒரு அறிமுக உரையினை செம்மொழிச் செல்வி பண்டிதை யோகலட்சுமி அம்மா அவர்கள் வழங்கி அனைவரையும் ஆட்கொண்டார். அத்தனை அருமையான கருத்துக்கள். ஐங்கரனின் கவிதைகளுக்குள் நின்று பல் வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்குள் சென்று அளவான அழகான உரையினை வழங்கியதுடன். கவிஞர் ஐங்கரனையும் வெகுவாக பாராட்டினார்.

ஆம் இந்தக் கணம் தான் அனைவரும் எதிர்பார்த்த கணம். அமாவாசை நிலவு கவி மலரின் சிறப்பு பிரதியினை பண்டிதை அம்மா அவர்கள் வழங்க அதனை மக்கள் வங்கி முகாமையாளர் திரு.கு.கோடீஸ்வரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கவிஞரை மக்கள் வங்கி வவுனியாக்கிளை சார்பாக முகாமையாளர் பொன்னாடை போற்றி கௌரவித்தார். 
அடுத்த கணம் மேடை நிறைந்தது அப்பப்பா கவிஞருக்கு என்று ஒரு கூட்டம் உண்டு போலும். பலர் சிறப்பு பிரதிகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்றார்கள். அனைவரும் ஆதரவு தந்தார்கள். மேடையில் வந்து மலரினை கவிஞரின் கையால் பெற்றுச் சென்றார்கள்.

தொடர்ந்து ஒரு கம்பீரமான கணீர் என்ற குரல் அவையை ஆட்கொண்டது. ஆம் தமிழருவி திரு.த.சிவகுமாhரன் அவர்கள் தனது இனிய தழிழால் ஆய்வுரையினை நிகழ்த்தினார். அதற்கு முன்பதாக தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழருவி அவர்கள் கவிஞருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கணமும் ஓயாமல் சொல் சொல்லாய் ஆய்ந்து அழகான அருமையான ஒரு ஆய்வுரையை வழங்கி நகைச்சுவையோடு கவிஞரின் திறன்களையும் அவரின் சிந்தனை வளத்தினையும் மனதார பாராட்டி சிறந்த கவிஞனாகவும் தரமான ஒரு படைப்பாகவும் ஏற்று அதனை அவையினருக்கும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். பல நுணுக்கங்களை நயங்களை, பல இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி பல்வேறு கோணங்களில் பகுத்தாய்ந்தார். என்ன ஒரு இடைவிடாத உரை. அவர் தழிழருவி என்பது சாலப் பொருத்தமே. அவையினர் அசையாது செவிமடுத்து இன்புற்றார்கள்.

அடுத்து கவிஞர் ஐங்கரனின் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்வை மேலும் கனதியாக்கியது. தன் கவி வரிகள் கலந்த உரையை வழங்கினார். இன்றைய இலக்கியப் போக்கையும், இலக்கிய ஆர்வம் உள்ளவர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கையும் எடுத்தியம்பியதுடன். அனேகர் கண் நிறையும்படியாக ஒரு அருமையான கைங்கரியத்தை ஆற்றினார். ஒவ்வோர் வீட்டிலும் ஒரு அமாவாசை நிலவு உண்டு அது யார் தெரியுமா? என்று வினவிய ஐங்கரன் எமக்காக பல தியாகங்களை மேற்கொண்டு எம் உயர்வுக்கு உண்மையான காரணமாக இருக்கின்ற அம்மாவே அமாவாசை நிலவு என்று பதிலளித்ததுமல்லாமல் அந்த அமாவாசை நிலவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கௌரவிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கூறி மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று தன் தாயாரை அழைத்து மாலை அணிவித்து கௌரவித்த காட்சி மனதை நெகிழச் செய்தது. அன்னையாரும் கவிஞரை கட்டியணைத்து தன் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.

மீண்டும் இந் நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தனித்தனியாக குறிப்பிட்டு கூறியதுடன் விழா நிறைவுக்கு வந்தது. 
மேடையை விட்டு இறங்கிய கவிஞர் குரும்பையூர் ஐங்கரனை அவரது உறவுகள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஊரவர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் நலன் விரும்பிகள் என்று பலர் கலந்து சிறப்பித்தனர். உண்மையில் அந்த அமாவாசை நிலவு பிரகாசித்தது என்பதில் சந்தேகமில்லை.
அனைவரும் ஐங்கரனை வாழ்த்தி. தம் உணர்வுகளை பகிர்ந்து விடைபெற்றார்கள். மன நிறைவோடு கவிஞர் அவர்களை வழி அனுப்பி பௌர்ணமி நிலவாய் பிரகாசித்து விடைபெற்றார்.

நல்ல ஒரு கவிஞனை நாடு பெற்றுள்ளது என்ற அடிப்படையில் குரும்பசிட்டிவெப்.கொம் அவரை வாழ்த்துகின்றது. எம் மண்ணின் பெருமை அவராலும் வாழட்டும். அவரும் வாழட்டும்.


நன்றி.