Print
Category: எம்மவர்பக்கங்கள்
Hits: 2489

செதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.

 

தாளத்துடன் கூடிய பண்ணிசையும், வயலினின் ரீங்காரமும், இராகத்துடன் பாடப்படும் துதிப்பாடல்களும் ஓயாது ஒலிக்கும் குரும்பசிட்டியின் ஆசிரியர்பரம்பரை ஒன்றின்  தெய்வீக நிழலில் தோன்றிய தீனபந்து, ஆய கலைகள் அறுபத்திநான்கு ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது ஒன்றும் அதியமானது அல்ல, ஆனால் இன்று அவர் வாழும் இடமும், புறச் சூழலிலும், அவருடைய கலைத்துறைக் உள்ள பல சவால்களையும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது தீனபந்து கிருபாகரன் அவர்களின் தீராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்.

எண்ணற்ற கலைஞர்கள் நிரம்பி இருக்கும் தென் தமிழ் நாட்டின் சிறந்த நுண்கலைக் கல்லூரியில் அனுமதிக்கு விண்ணப்பித்த 600 மாணவர்களில் அனுமதி கிடைத்த 100 மாணவர்களில் ஒருவராகத் தகமை பெற்ற தீனபந்து நான்கு வருடங்களில் தனது கலைத்துறை பட்டம் (Bachelor of Fine Arts) பெற்று 2வது தலை சிறந்த மாணவனாகத் (Master of Fine Arts) தெரிவு செய்யப்பட்டு கல்வியைத் தொடர்கின்றார். நிலையான படிமானங்களை பல தடவைகள் மீணடும் காட்சிப் படுத்தி  நகர்வது போல் காட்டும் (Animation)   தொழி;ல் நுட்பத்தை மேலதிகமாக கல்வியாக தீனபந்து அவர்கள் கற்று நுட்பான கலையறிவைத் தன்னகத்தே கொண்டவராகத் திகழ்கின்றார்.

போட்டிநிறைந்த ஒரு சூழல் ஒன்றுக்குள் வேறு மார்க்கம் எதுவும் இன்றி புகுந்து, பார்ப்போர் வியக்கும் வண்ணம் தூரிகையால் கோலமிடும் தீனபந்து அவர்களின்  வெற்றிக்கு படிக்கட்டாக இருப்பவர் அவருடைய தந்தையார் விலங்கியல் மருத்துவ நிபுணர் திரு. குமாரவேலு கிருபாகரன் அவர்களேயாவர். தன் மைந்தனின் கலைப்பசியைப் போக்க அல்லும் பகலும் அலைந்து மகனை ஒரு கலைஞானக உயர்த்தி மற்றவர் போற்றக் கண்டு மனம் குளிரும் பெற்றார்களாகத் திகழும் திரு கிருபாகரன், உமாதேவி கிருபாகரன் அவர்களுக்கு மைந்னின் ஒவ்வொரு வெற்றியிலும் பங்கு உடையவர்கள் என்றால் மிகையாகாது.   
 
கல்லூரியின் அதிபர் அவர்களே முன்னின்று நடாத்திய சித்திரக் கண்காட்சி ஒன்றின் தனது ஆக்கங்களை அரங்கேற்றிய தீனபந்து கிருபாகரன் அவர்களின் அபாரத்திறமை கண்டு அவரது சித்திரங்கள் அமரிக்கா மற்றும், ஜக்கிய அரபுகள் நாடுகளான துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீனபந்து வின் திறமை மென்மேலும் உயர குரும்பசிட்டியர்களாகிய நாம் எல்லோரும் வாழ்த்த வேண்டும், இவருக்கு கிடைக்கும் நற்பெயரும் புகழையும் எண்ணி நாம் எல்லோரும் மனம் குளிர வேண்டும். இவை எல்லா வற்றுக்கும் மேலாக தும்பிக்கையனின் முத்தம் வந்து தொழுது செல்லும் தீனபந்துவின்; பாட்டன் அமரர் திரு குமாரவேலு அவர்களினதும், அம்பாளின் பாதமே சரணமமென மனமுருகி தொழுது செல்லும் அமரர் திரு இராமலிங்க ஆசானின் ஆசியும் என்றும் இந்த சாதனையாளனுக்கு கிடைக்கும்.


குரும்பசிட்டியனைக் குரும்பசிட்டியில் இருந்து பிரிக்கலாம்...ஆனால் 
குரும்பசிட்டியை 
குரும்பசிட்டியனிடம் இருந்து பிரிக்க முடியாது.


ஆக்கம் 
புலந்திரன் மகேசன்