குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இவ் கூட்டு வழிபாடானது மதியம் 1.00 மணியளவில் அன்னதானத்துடன் நிறைவுபெற்றது. குரும்பசிட்டி அம்பாள் அடியார்களும் ஏனைய அடியார்களும் பங்கேற்று பக்தி வழிபாடு செய்தனர். வளர்மதி சன சமூகத் தலைவர் திரு சக்திவேல் அவர்களின் ஆரம்ப உரையுடனும், எமது குருக்கள் அய்யா ஸ்ரீ குஞ்சிதபாத அய்யா அவர்களின் ஆசியுரையுடனும் ஆரம்பமாகிய பூஜை வழிபாடு பக்தி பரவசமாக உணரவைத்தது. அனைவரையும் ஊருக்குச் கூட்டிச் சென்றதை உணர முடிந்தது. அதிலும் அழகிய ஆள் உயர அமைந்த அம்பாளின் உருவப்படமும், அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையும், அதற்கு மேலாக ஸ்ரீ இரத்தின அய்யா அவர்களின் புதல்வர் ஸ்ரீ கண்ணன் அய்யா ஓதிய மந்திர உச்சாடனமும் மெய்சிலிர்க்க வைத்தன.


ஆரோகரா என்கின்ற அந்த ஆத்மார்த்தமான ஒலி அடிமனதில் இருந்து எழுந்த வண்ணமே இருந்தன.


மேலும், திருவெம்பாவை பற்றி திரு சத்தியசீலன் அவர்களின் புதல்வி அவர்கள் ஒரு சிறப்பான உரையாற்றினார். அத்தோடு எமது ஊர் கவிஞர் தம்பித்துரை ஐங்கரன் அவர்கள் அம்மனின் சிறப்பை கவிதையில் வடித்து படித்தார். குருக்கள் அய்யா அவர்களின் தீபாராதனையில் தெய் ஒளியில் நனைந்து. மாரி மழையையும் பொருட்படுத்தாது எம் முத்துமாரியின் அருள் மழையில் நனைந்து செல்ல எம் அடியார்கள் கலந்திருந்தமை மனதுக்கு பெரும் மகிழ்வை தந்தது.
வருடந்தோறும் வளர்மதி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் இந் நிகழ்வு இவ்வாண்டு சிறப்பாக காணப்பட்டது. மேலும் இது நாம் இடப்பெயர்வை சந்தித்து இருபது வருடங்கள் ப+ர்த்தியான நிலையில் காண்கின்ற திருவிழாவாகும். “இந்த ஆண்டு ஊருக்குச் சென்றுவந்தோம், அடுந்த ஆண்டு ஊhருக்குச் சென்று வாழ்வோம்” என்று அம்மனை பிரார்த்திப்போம் என்று ஐங்கரன் அவர்கள் தன் உரையில் குறித்ததை மெய்பிக்கும்படி அனைவரும் பக்தியோடு கலந்திருந்தார்கள்.
எமது குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் தடைகள் அனைத்தையும் நீக்கி காளத்தியில் கண்ணப்பனாருக்கு கருணை புரிந்த கடவுள் போல் காடாய் உள்ள எம் ஊரையும் பழைய நிலைக்கு தருவார் என்று நம்பிக்கையுடன் அருள் உரை வழங்கினார். ஸ்ரீ குஞ்சிதபாத குருக்கள் அவர்கள்.


வளர்மதி சன சமூக நிலையத் தலைவர் திரு சக்திவேல் அவர்கள் இந்நிகழ்விற்கு உதவிய உள்நாட்டு வெளிநாட்டு எம் உறவுகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார். இளம் சமுதாயம் ஊhர் பற்றுடன் இத்தகைய எம் ஊhர் விழுமியங்களை கட்டிக் காக்க முன்வருமாறு உற்சாகப்படுத்தும் படியாய் அவரின் உரை அமைந்தது.
அம்மனின் அருள் மனதுக்கு இதமளிக்க அன்னதானத்தையும் அனைவரும் வாழை இலையில் அமர்ந்து அருந்தி மகேஸ்வர பூஜையிலும் மனது குளிர்ந்து. உறவுகள் உறவாடி நலம் விசாரித்து, அம்பாளை பூ இட்டு வணங்கி புது வாழ்வு மலர பிரார்த்தித்து. நிறைந்த திருப்தியுடன் அனைவரும் அதே நினைவுடன் விடைபெற்றார்கள்.

அடியேன் இந்நிகழ்விற்கு ஒரு சிறப்பு பெயரைக் கொடுத்து அருட்காற்று என அழைக்கலாம் என நினைக்கின்றேன். எம் ஊரின் தெய்வங்களின் அருட்காற்று என்றும் எம் மேல்படுவதனால் தான் நாம் நலமாக  என்றும் வாழ்கின்றோம். வருடத்தில் ஒருமுறை இவ்வாறு கூடி பிரார்த்திக்கின்ற இத்தகைய வழிபாடு இனி எமது சொந்த ஊhரில் நடைபெற இவ் அருட்காற்று எமக்கு அருள் புரியுமாக.
நன்றி

- இவ்வண்ணம் -
குரும்பசிட்டி அன்னையின் அடியார்கள்

புகைப்படங்களை பார்வையிட இங்கு அழுத்தவும்


 
அன்றைய தினத்தில்  அம்மனின் அருள்நாடி கவிஞர் ஐங்கரன் அவர்கள் வடித்து படிக்கப்பட்ட அருள் கவிதை 
 

கூடி உன்னை கும்பிடுவோம் 
குரும்பையூரு மாரி 
ஓடி வந்து அணைத்திடம்மா 
அன்புடனே வாரி

வீடிழந்து வாடுகிறோம்
வீர முத்து மாரி 
விடு கதையை நீக்கிடம்மா 
விடைகளை நீ கூறி

நின் புகழை நாமறிவோம் 
அன்னை முத்து மாரி 
உன்னடிகள் போற்றுகின்றோம்
உவக்கும் மலர் தூவி

ஊர் காக்கும் உத்தமியே 
உலக முத்து மாரி 
தேரேறி வருவதென்றோ
சேர்ந்து மகிழ நாமும்

மார்கழியில் மனம் குளிர்வோம் 
மகுடம் சூடும் மாரி 
திருவருளைப் பெறுவதற்கே 
திருவெம்பாவை பாடி

வேப்பமரச் சோலையிலே
 வந்துறையும் மாரி 
விரும்பியே தான் வந்தனையோ 
வேப்ப மரம் தேடி

போரெல்லாம் போக 
வேண்டும் பொட்டழகி மாரி 
ஊர் திரும்பும் நாளெதுவோ? 
உறவுகள் நாம் கூடி

பூர்வ வினை போக்கி விடும் 
புவனம் ஆழும் மாரி 
யாரிழைத்த பாவம் இது 
கூறு அறிவுத் தேவி
 

குரும்பையூரும் அழிந்திடுமா?
குலவிளக்கே மாரி 
வருந்துகிறோம் வந்தெமையும் 
வாழ வைப்பாய் தேவி