குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

பல்கலைப் பரிணாம வித்தகர்களைக் கொண்டது எங்கள் குரும்பசிட்டிக் கிராமம் என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்று. இங்கே நாடகத்துறையில் காலூன்றிய பரிச்சயமான பலருள் திரு.க.சிவதாசன் அவர்களும் ஒருவராவர். இவர் இளைஞராக சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் நிர்வாக சபை உறுப்பினராக இருந்தவேளையில் 1960 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிலே, ஊரிலே மிகச்சிறந்த நடிகரான திரு.க.கோபிநாத் அவர்களால் எழுதித் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றப்பட்ட ‘பழிக்குப்பழி’ என்ற நாடகத்தில் கதாநாயகனாகத் தோன்றி நாடகக் கலையில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஐம்பது வருடகாலக் கலைப்பணியில் சேவை புரிந்த இப்பெருமகனை, பாரெங்கும் சீவிக்கும் எங்கள் கிராமத்து மக்கள் சார்பாகவும், குரும்பசிட்டி நலன்புரிச்சபை – கனடாவின் சார்பாகவும் வாழ்த்தி வணங்குவதுடன்,மேன்மேலும் அவர்தம் கலைப்பணி தொடர எல்லாம் வல்ல இறையருளையும் வேண்டிநிற்கிறோம்.

திரு.கந்தப்பு சிவதாசன் அவர்கள் தலைசிறந்த நாடக நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பரிணமித்தவர். முதலாவது நாடகத்திலேயே இவரது உணர்வு பூர்வமான நடிப்பாற்றலைக் கண்ணுற்ற அன்றைய சன்மார்க்க நாடக மன்றத் தலைவர் காலஞ்சென்ற ‘கலைப்பேரரசு’ திரு.ஏ.ரீ.பொன்னுத்துரை அவர்கள், தனது ‘பகையும் பாசமும்’ நாடகத்தில் எழுபது வயதுக் கிழவனாக நடிக்கவைத்தார்கள். அப்போது இவரின் வயது பதினாறு. தொடர்ந்து கலைப்பேரரசு அவர்களின் ‘ஆயிரத்தில் ஒருவர்’, ‘தாகம்’, ‘பாசக்குரல்’, ‘ஒளி பிறந்தது’ போன்ற பலவிதமான நாடகங்களில் நடித்த இவர் நாடக ஆளுமையைக் கற்றுக்கொண்டார். அதன்மூலம் தனக்கென ரசிகர்களைத் தேடிக்கொண்டார். ரசிகர்களுள் சிலரை நாடகக் கலைக்கென உருவாக்கினார்.

‘கலைப்பேரரசு’ திரு.ஏ.ரீ.பொன்னுத்துரை அவர்களைத் தனது குருவாகக்கொண்டு முதன்முதலாக தான் எழுதிய கதைக்கு, காலஞ்சென்ற சிறந்த எழுத்தாளர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களைக்கொண்டு வசனம் எழுதுவித்து ‘அன்பின் எல்லை’ என்ற நாடகத்தைத் தயாரித்து சன்மார்க்க சபை மண்டபத்தில் மேடையேற்றியபொழுது காலஞ்சென்ற சிறந்த எழுத்தாளரும், விமர்சகருமான ‘இரசிகமணி’ கனக.செந்திநாதன் அவர்கள் மிகவும் சிறந்த நாடகம் என்று இவரைப் பாராட்டினார். பின்பு குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங்கம், வளர்மதி சனசமூக நிலையம், உதயதாரகை மன்றம் போன்ற அமைப்புகளினூடாக ‘இலட்சிய வேட்கை’, ‘மெழுகுவர்த்தி’, ‘குடும்பம் ஒரு கோயில்’, ‘நெஞ்சு பொறுக்குதில்லை’, ‘காதலும் மோதலும்’, ‘சத்திய சோதனை’, ‘கௌரவம்’, ‘போராட்டம்’, ‘அசட்டு மாப்பிள்ளை’, ‘அடிபட்ட புலிகள்’ ஆகிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி பலரினதும் பாராட்டைப் பெற்றார். மு.திருநாவுக்கரசு அவர்கள் சகோதர பாசம், சுதந்திர தாகம், சீதனக்கொடுமை, சாதிப்பிரச்னை, வர்க்க முரண்பாடு ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு சிறந்த நாடகங்களை எழுதிக்கொடுத்தமையால் இவர் மேடையேற்றிய பல நாடகங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன.

சட்டத்தரணி திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் எழுதித் தயாரித்த ‘கோட்டுக்குப் போகாதே’ என்ற நாடகத்திலும், காலஞ்சென்ற சிறந்த நாடகக்கலைஞர் திரு.ஏ.சிவதாசன் அவர்கள் நெறிப்படுத்திய கமலாலயத்தின் தயாரிப்பான ‘வாடகை வீடு’, ஞான ஒளி’ என்ற நாடகங்களிலும், காலஞ்சென்ற சிறந்த நாடகக் கலைஞர் திரு.வீ.எம்.குகராஜா அவர்கள் தயாரித்து நெறிப்படுத்திய ‘புதிய பிறவிகள்’ என்ற நாடகத்திலும், மேடை வானோலி நாடகத் தயாரிப்பாளர் காலஞ்சென்ற வரணியூர் திரு.எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் நெறிப்படுத்தலில் ‘பித்தலாட்டம்’ என்ற நாடகத்திலும் பலதரப்பட்ட குணாபாத்திரங்களை ஏற்று நடித்து ஊரிலும், யாழ் மாவட்டத்திலும், கொழும்பு முழுவதுமாக மிகச் சிறந்த நடிகர் எனப் பலரினதும் பாராட்டைப் பெற்றார். பதினாறு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ‘இலட்சிய வேட்கை’ என்ற நாடகத்தில் நடிப்பைப் பழக்கி யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாடகப் போட்டிகளில் மேடையேற்றி முதற்பரிசான தங்கப்பதக்கங்களைப் பெற்று எமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்தார். குரும்பசிட்டி வளர்மதி சனசமூக நிலையம் தொடர்ந்து ஏழு வருடங்களாக நடாத்திய நாடகப் போட்டிகளில் போட்டி அமைப்பாளராகக் கடைமையாற்றி தான் ஒரு சிறந்த நிர்வாகத் திறமைகொண்ட அமைப்பாளர் என்ற பெருமைக்குரியவரானார்.

பின்பு 1985 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் ‘அமைச்சூர் நாடக வட்டம்’ என்ற அமைப்பினை உருவாக்கி தனது கிராமத்தில் மேடையேற்றிய பல நாடகங்களையும், மற்றும் விடிவு, யார் கூலி?, யார் தெய்வம்?, யார் துரோகி?, அழாத உலகம், தாலாட்டுப் பாடமாட்டேன் ஆகிய நாடகங்களையும் தயாரித்து மேடையேற்றி மேற்கத்தைய நாட்டிலும் பல புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கி நாடகக் கலை வளரப் பாடுபட்டார். தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதி சேர்ப்பதற்காக நடாத்தப்பட்ட கலைவிழாக்களில் ‘விடிவு’ என்ற நாடகத்தினை மேடையேற்றிய பெருமையும் இவருக்குண்டு.

1999 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வருகின்ற காலகட்டத்தில் குரும்பசிட்டி நலன்புரிச்சபை – கனடா நடாத்துகின்ற ‘பொன்வயல்’ என்ற கலைவிழாக்களில் ‘தாலாட்டுப் பாடமாட்டேன்’, ‘அழாத உலகம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார். நமது ஜேர்மனிக் கலைஞன் திரு.எஸ்.கதிர்ச்செல்வன் அவர்களின் நவீன நாட்டுக்கூத்தான ‘இறுதிப்போர்’, குரும்பசிட்டி இ.இராசரத்தினம் அவர்களின் வில்லிசை நிகழ்ச்சியான ‘ஊரை இழந்துவிட்டோம் அம்மா’, மற்றும் ‘கனடாவில் சீனியேர்ஸ்’ போன்றவற்றில் நிறைவான தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். ’கனடா உதயன் பத்திரிகையின் 2004 ஆம் ஆண்டுக் கலைவிழாவிலே ‘இலட்சிய வேட்கை’ என்ற நாடகத்தினை இரு நாட்களும் மேடையேற்றியபொழுது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல சினிமா நடிகை ‘ஆச்சி’ மனோரமா அவர்களின் நேரடிப் பாராட்டினைப் பெற்றுக்கொண்டார்.

இப்படியாகப் பல நாடகங்களைத் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றியதோடு மட்டுமல்லாமல் பல சிறந்த நடிகர்களையும் உருவாக்கி, இன்றும் நாடகமே தன் உயிர் மூச்சாக வாழ்ந்து வருகிறார். மீண்டும், இப்பொன்விழாக் கலைஞர் திரு.க.சிவதாசன் அவர்கள் நீண்ட சுக ஆயுளுடன் வாழ்ந்து கலைச்சேவை பல புரிய இறையருளை வேண்டிநிற்கிறோம்.

‘நம்நாடு’ காந்தன்.
நன்றி ‘பொன்வயல்-2006