குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி மண்னைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், வவு/பூவரசங்குளம் மகா வித்தியாலய ஆசிரியையுமான செல்வி. சுகிர்தா சிவசுப்பிரமணியம் அவர்கள் நிருத்திய கலா சேஷத்திரம் என்ற நாட்டியப் பள்ளியை 15.09.2007 இல் ஆரம்பித்து ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டும், நாட்டியப் பள்ளி மாணவர்களுடைய நடன ஆற்றுகையை வெளிக்கொணரும் நிகழ்வும் கடந்த 13.09.2008 சனி பி.ப. 02 மணிக்கு வவு/நெளுக்குளம் மகா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பிக்கும் போது விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நாட்டியப்பள்ளி இன்று கிட்டத்தட்ட ஜம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுடன் நடாத்தப்படுகின்றது.

மண்டபம் நிறைந்த குரும்பசிட்டி, வவுனியா மக்கள் கூட்டத்துடன் நிகழ்ந்த இவ் விழாவில் வவு/இலங்கை வங்கி வாடிக்கையாளர் சேவைகள் முகாமையாளரும், சன்மார்க்கசபையின் பொதுச் செயலாளருமாகிய திரு. பொன். பாலகுமார் சிறப்பு விருந்தினராகவும், வவுனியாவின் மூத்த இலக்கியவாதி திரு. தமிழ்மணி அகளங்கன்,  வவு/கல்வித்திணைக்கள ஆசிரிய ஆலோசகர் திருமதி. வே. சூரியகுமார், வவு/நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் தலைவர் திருமதி. வீ. சூரியயாழினி, வவு/தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி. யோ. கிருபாகரி, வவு/பூவரசங்குளம் மகா வித்தியாலய அதிபர் திரு. சிவநாதன், வவு/ நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய அதிபர் திரு. சு. அமுதலிங்கம் ஆகிய பிரமுகர்கள் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் விழாவின் ஆரம்ப நிகழ்வான மங்கள விளக்கினையும் ஏற்றி ஆரம்பித்து வைத்து சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வில் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடனக்கலை நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக தனி நடனம், குழு நடனம், தாளக்காவடி ஆட்டம் போன்றனவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு, அரங்கத்தவர்களினதும் பார்வையாளர்களினதும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

 குரும்பசிட்டியைச் சேர்ந்த சிவசக்தி சிவசுப்பிரமணியம் தம்பதியினரின் புதல்வியான செல்வி சுகிர்தா தனது ஆரம்ப பாடசாலைக் கல்வியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்திலும் பின்பு போர்ச் சூழலினால் தனது ஊரைவிட்டு இடம்பெயர நேரிட்டமையால் க.பொ.த உயர்தரத்தை வவு/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திலும் கற்றுவந்தார். தனது ஆரம்ப நடனக்கலையை யாழ்/ உரும்பிராயைச் சேர்ந்த சந்திரவதனி பகீரதன் அவர்களிடமும், தொடர்ந்து வவு/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய நடன ஆசிரியை கிருபாகரி யோகராஜாவிடமும் கற்றறிந்தார்.

 அடுத்து வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் தேர்வு பெற்றமையால் சங்கீத சபையினால் பரதகலா வித்தகர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். க.பொ.த உயர் தரத்தில் நடனப் பாடத்தில் சிறப்புச் சித்தி எய்தி யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் இருப்பினும் நடன ஆசிரியை நியமனம் பெற்று கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டதுடன் தனது பயிற்சிக் கலாசாலையின் ஆசிரியை திருமதி. சாந்தினி சிவநேசன் அவர்களிடமும் நடனக் கலையில் இருக்கும் நுணுக்கங்களை மிகவும் சிறப்புடன் கற்றறிந்தார் தற்பொழுது வவுஃ பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் நடன ஆசிரியையாக பணிபுரிகின்றார்.

 

வவுனியாவிலிருந்து
திரு.சிங்கராஜா கௌரிபாலன்

 

(புகைப்படங்கள் உதவி:திரு.சிங்கராஜா கௌரிபாலன்)