குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

9-08-2008 சனிக்கிழமை மாலை ஜேர்மனியில் உள்ள டோற்முன் நகரில் திரு ஜயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்களின் தொகுப்பான கொலுவீற்றிருந்த குரும்பைநகர் என்ற வரலாற்று நூல் அறிமுக விழா இனிது நடைபெற்றது.

பல காலமாக எங்கள் கிராமத்தில் நாதஸ்வர தவில் மழை பொழிந்த தவில் வித்துவான் மறைந்த சூடாமணி அவர்களின் புதல்வன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இந் நிகழ்வில் நாதஸ்வரகானம் இசைக்க தன்குழுவினருடன் கொலன்ட் நாட்டில் இருந்து வருகைநதந்திருந்ததோடு விழாவுக்கு வந்தவர்களை மண்டப வாசலில் இருந்து ஒளி மயமான எதிர் காலம்.... என்ற இனிய கானத்தினத்துடன் விழா மேடைவரை அழைத்து சென்று தன்பங்களிப்பை வழங்கியபோது

எங்கள் ஊரின் ஆலயவீதிகளில் நடந்து சென்றது போன்று நினைவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பொன் வயலின் நன் மணிகள் பன்னிருவர் விளக்கேற்ற, குரும்பசிட்டி மண்ணே தெரியாது வெளிநாட்டில் பிறந்து வளரும் எம் மண்ணின் விழுதுகளான மாணிக்க வாசாகர் சுரெஸ்குமார் தம்பதிகளின் குழந்தைகள் மங்கள நதஸ்வரம் கேட்குமா குரும்பசிட்டியில்... என்ற விழா அமைப்பாளர் ஒருவர் இயற்றிய பாடலை மனமுருகிப் பாடிய போது கேட்போரின் இதயம் கனத்தது. எந்த நிகழ்ச்சியை எந்த விழாவில் எப்போது அரங்கேற்ற வேண்டும் என்று நன்றாகத் தெரிந்து நடாத்திய விழா அமைப்பாளர்களைப் பாராட்ட வேண்டும். அவ்வளவிற்கு நாதஸ்வர இசையும் மங்கள கீதமும் இந்த விழாவை மெருகூட்டியது. 
 
 அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நூல் அறிமுக அமர்வு குரும்பசிட்டியின் புகழ்பூத்த நாடக்கலைஞர்களில் ஒருவரான திரு. க. சிவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

 ஆறு மணத்தியாலம் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ள என ஆறாயிரம் மைல்கள் கடந்து வந்து இவ் விழாவிற்குச் சிறப்புச் சேர்தத முன்னைநாள் வங்கி முகாமையளரும் சட்டத்தரணியுமான திரு. சுப்பையா. சிவபாதம் அவர்கள், சன்மார்க்க சபை என்ற அறிவாலயத்தைக் காக்கும் அறங்கவாலர். யுத்தத்தினால் அன்னல் படும் எம்மவருக்கு உதவும் கரம். வாழ்க்கையின் ஏழ்மை நிலையிலிருந்து தன் அயராத முயற்சியினால் உயர்ந்த பதவியை வகித்தவர், கல்வி கற்பதற்க்கு வயதேதும் கிடையாது என்பதை செயலில் காட்டிய வீரர், அடக்கமே உருவான மரியாதைக்குரிய அந்த மனிதரை சந்திக்கும் வாய்ப்பு இவ்விழா மூலம் எம்மவருக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நூல் தொகுப்பாளரின் திறமையைப் பாராட்டிய சட்டத்தரணி திரு. சுப்பையா சிவபாதம் அவர்கள் தாயகத்தில் உள்ள எம்மவர் நிலைமையப் பற்றி சிறப்பாகவும் உரையாற்றினார்.

 நூலின் சிறப்பையும் இந்நூலில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களைப் பற்றியும் ஆய்வுரை நிகழ்த்திய கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டதோடு திரு. ஜெகதீஸ்வரனின் முயற்சிக்கும், அவர் எதிர்காலத்திலும் துணிச்சலுடன் புதிய பல ஆக்கங்களை உருவாக்க ஊண்டுதலையும் கொடுத்து உரையாற்றினர். தன் உரையின் நிறைவில் குரும்பசிட்டியின் புகழ் உலகெங்கும் பரவ எங்கள் கைகளில் இந்த நூலைத் தந்த திரு. ஜெகதீஸ்வரனை பாராட்டி அவரை இவ்வுலகிற்குத் தந்த அன்னை திருமதி மாணிக்கம் ஐயாத்துரை அவர்களிற்கு அனைவரையும் எழுந்து நின்று கரகோசம் செய்து மரியாதை செய்ய வைத்த நிகழ்வானது கலாநிதி சிவகுமாரன் தன்னகத்தே கொண்டிருக்கும் சிறப்பான குணாதிசயங்களிற்கு ஒரு உதாரணமாக அமைந்ததோடு, பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அன்றும், இன்றும், என்றும் எம்மவர் மனங்களில் நிறைந்திருக்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டாகவும் இருந்தது. அமைதிப்புறாவாக அரங்கத்தில் அமர்ந்திருந்த அன்னை திருமதி; ஐயாத்துரை மாணிக்கம் அவர்களிற்கு எம்மவர் அளித்த மரியாதை அவர் மனதில் நிட்சயம் ஆத்ம திருப்தியை அளித்திருக்கும். 

இந் நூலில் சேர்துக் கொள்ளத் தவறிய சில விடயங்களின் முக்கியத்துவம் பற்றி ஆய்வுரை நிகழ்த்திய திரு கந்தையா ஸ்கந்தமூர்த்தி அவர்கள், குரும்பசிட்டிக் கிராமத்தி ன் பொதுப் பணிகளில் தனது அன்றைய நாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், துன்பத்தில் வாடுபவர்களுக்கு எம்மவர் உதவ என்றுமே பின்னிற்பதில்லை என்ற கருத்துக்கு ஆதாரங்களுடன் உரையாற்றினார். தங்கள் நற்பணிகள் மூலமாக எம் மண்ணிற்குப் பெருமை சேர்த்த எம்மவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே உரியமரியாதையை வழங்கவேண்டும் என்பது இவரின் கருத்தாகவும் இருந்தது.

மற்றும் எம்மவர்களுடன், ஜேர்மனியில் வாழும் இலக்கிய ஆர்வலர்களும் உரை நிகழ்த்தியதை அடுத்து நூலின் தொகுப்பாளர் திரு ஜயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்களினன் ஏற்புரையுடனைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்பட்டதன் பின் 
தன்னையே எம் கிராமத்திற்கு அற்பணித்து வாழ்ந்து வரும் இளைப்பாறிய அதிபர் திரு. சின்னத்துரை நடராஜா அவர்களின் உரை வெள்ளித்திரையில் காண்பிக்கப்பட்டது. வயது முதிர்ந்த போதும் அவரது பேச்சுத்திறனும், எங்கள் கிராமம் எங்களுக்குக் கிடைக்க வேணும் என்று ஏக்கமும் அவரது மனதின் அடிநாதத்தில் இருந்து ஒலித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. (விரைவில் அவரது உரை இவ் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வரும்.) 

அதிபர் திரு. சின்னத்துரை நடராஜா அவர்களின நீண்ட ஒரு சிறந்த உரையைத் தொடர்ந்து, இசைவிழாவாக எம்மண்ணில் பூக்காத கண்மணிகள் செவிக்கும், விழிக்கும் விருந்தாக அளித்த பாடல், இசை, நடன, கவிதை, நிகழ்வுகள் வந்தவர் மனiதிற்கு பெரு விருந்தாகவும் அமைந்தது.

தன் மழலைத் தமிழால் கவிதை மழை பொழிந்த திரு. விஜயகாண்டீபன் தம்பதிகளின் புதல்வி தான் கணாத தேசம் ஒன்றை மற்றவர் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார். அத்தோடு சுற்றிச் சுழன்று தன் பிஞ்சுக் கரங்களை அசைத்து நடனாமாடிய திரு. ஜீவசுதன் தம்பதிகளின் சிறு குழந்தை பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தார்.

கலைக்கொரு கோவிலாக வாழ்ந்து வரும் திரு. சுப்பிரமணியம் பாலகுமாரன் தம்பதிகளின் புத்திரிகள் மூவரும், திரு. மாணிக்கவாசகர் சுரெஸ்குமார் தம்பதிகளின் மூன்று செல்வங்களும் அழிந்து போய் இருக்கும் தம் தந்தையர் நிலத்தை இசையால் உயிப்பிக்கத்துடிக்கும் இளம் குயில்கள். இவர்களின் இசை வெள்ளத்தில் எம்மவர் நனைய கிடைத்தது ஒரு அரிய சந்தாப்பம் ஆகும்.

இந்த இளம் சிட்டுக்களின் இசையை இரசிக்கும் வாய்ப்பைத் தந்ததற்கும், விழாவிற்கு விருந்தினராக வந்தவர்களை எல்லாம் தம் வீட்டுக்கு வந்தவர்களைப் போல் உபசரித்து வழியனுப்பியதற்கும் பலகாலமாக இவ்விழாவிற்காக பகலும் இரவும் உழைத்த விழா ஒருங்கமைப்பாளர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். இவர்கள் போன்று சமூக சிந்தனையும், தாய் நிலப் பற்றுங் கொண்டு வாழும் குரும்பசிட்டியர்கள் அவைரும் ஒரே அணியில் திரண்டால் மூடப்படும் நிலையில் உள்ள எங்கள் கிராமத்தின் கல்வி களஞ்சியமான பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தை இன்னும் பல ஆண்டுகள் எம்மவர் தயவிலேயே நடாத்தலாம், எதிலிகளாக அலையும் எங்களின் உறவுகளுக்கு அபயக்கரம் கொடுத்து எங்கள் மண்ணிலேயே அவர்களை குடியமர்த்தலாம். இவற்றைச் செயலில் செய்ய அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். 

காலத்தால் அளியாத எங்கள் கிராமத்தின் தகவல்களைத்திரட்டித் தகவற்களஞ்சியமாக வெளிவந்திருக்கும் கொலுவீற்றிருந்த குரும்பைநகர் என்ற இந் நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஜேர்மனியில் உள்ள டோற்முன் நகரில் வசிக்கும்; திரு. இளையப்பு செல்வராஜா அவர்களுடன் தொடர்பு கொள்ளவும். ஜேர்மன் தொடர்புகலுக்கு : - தொலைபேசி இலக்கம்- 0049 (0) 2311 845 1161 
                                                                                        0049 (0) 1627 516 025

 பிரித்தானியா தொடர்புகலுக்கு : - தொலைபேசி இலக்கம் - 00447932066483 (5.30-11PM)
 

 .....::::::  நன்றி :::::......