குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

புலம்பெயர்ந்த மண்ணில் தனது பல்வேறு ஆளுமைகளை வளர்த்துக் கொண்டு ஆழமாக நண்பர்களை நேசித்து வரும் பண்பாளராகிய குரும்பசிட்டி ஐ.ஜெகதீஸ்வரன், எமது தமிழ் மக்களின் வளர்ச்சிப்பாதையில் பல தடங்களைப் பதித்த ஒருவர். இம்மண்ணில் தனது இடையறாத முயற்சிகளால் ஈழத்து பேச்சு, கவிதை, சமூகப்பணிபோன்ற அனைத்திலும் தன்னை ஈடுபடுத்தி சேவைபுரிந்ததுடன் தொழிற்றுறையிலும் கால் பதித்திருக்கும் இவர், குரும்பசிட்டி மண் படைத்துள்ள பல்வேறு சிறப்புப் பணியாளர்களில் தானும் ஒருவராகி மிளிர்கிறரர்.

 அனைத்து நண்பர்களாலும் ‘ஜெகா’ என்றும் ‘ஜெகதீஸ்’ என்றும் அழைக்கப்படும் இவர், 1952ம் ஆண்டு ஐப்பசி மாதம் 8ம் திகதி குரும்பசிட்டி ஐயாத்துரை - மாணிக்கம் அவர்களது புதல்வராகப் பிறந்தார். இவரே குடும்பத்தில் மூத்தவர் இரண்டு இளையசகோதரிகளும் ஒரு இளைய சகோதரரும் உள்ளனர். பொன் பரமானந்தர் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட இவர், ‘வளரும் பயிரை முளையில் தெரியும்’ என்பதற்கேற்ப இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது நடிக்க ஆரம்பித்துள்ளார். மூன்றாம் வகுப்பில் இவர் கல்விகற்ற போது விவேகானந்தர் சபையினர் நடத்திய அகில இலங்கைரீதியில் இந்து சமயப் பரீட்சையில் மூன்றாவதாக வந்து சாதனை படைத்தார். நாலாம் வகுப்பிற்கு தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குச் சென்றார். இங்கு கல்வி கற்க ஆரம்பித்த வேளையில் மகாத்மா காந்திக்குத் தாயார் கொடுத்த ஆணைபோன்று இவரது தாயாரும் புகைபிடித்தல், வெற்றிலை போடுதல், மதுஅருந்துதல் என்பனவற்றைச் செய்யக்கூடாது என்று கூறிய ஆணையை இன்றுவரை காப்பாற்றியும் வருகிறார்.

 ஐந்தாம் வகுப்பு முதல் பாரதி மன்றத்தினர் நடாத்திய எழுந்தமான கதைகள் சொல்வதிலும், தமிழ் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலும் பரிசில்கள் பெற்று தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தனது திறைமைகளை வளர்த்துக்கொண்ட இவர், ஆறாம்வகுப்பு முதல், மாணவர் மன்றங்களில் தலைவர், செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றியுள்ளார். 
 
 1967ம் ஆண்டு இவரது வாழ்வில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. இந்த வருடம் ஐப்பசி மாதம் சன்மார்க்க சபை இளைஞர் மன்றம் புதிய கட்டிடம் ஒன்றை நிறுவ முற்பட்ட வேளையில் அதில் ஈடுபட்டு உழைத்ததுடன் ‘சன்மார்க்க தீபம்’ சஞ்சிகை வெளியானபோது. இவரும் செல்லத்துரை விக்கினேஸ்வரனும் இணையாசிரியராகச் செயற்பட்டு, இம்மன்றத்தின் மூலம் பல இலக்கிய சாதனைகளைப் புரிந்தார். 
 
 குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் மன்றத் தலைவராகச் செயற்பட்ட வேளையில் சமய நிகழ்ச்சிகளிலும் இவர் பல அரிய நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார். சித்தி விநாயகர் கோவில் வருடாந்த உற்சவங்களிலும்;, அதேபோன்று சமூகரீதியாகவும் இவர் செயற்பட்ட வேளையில், வற்றாத கிணறாகிய ‘பேய்க்கிணற்றினை’ ஆய்வு செய்வதற்கான அதிகாரிகளை அழைத்துச் செயற்பட்டதுடன், அதற்காக தேசியக்கட்சிகளையும் அணுகியிருந்தார். சில சூழ்நிலைகளால் இது செயற்படாது போயினும், அவரது மண்பற்றும் ஆய்வுத்திறனும் இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாகும். சமபந்தி போசனங்களில் பங்கெடுத்து சமூகப்பணி புரிந்தார். அன்றே, சமூக மாற்றத்தினை வேண்டி நின்ற ஒரு முற்போக்கு இளைஞராக இவரைக்காணமுடிந்தது. 70களில் சிங்கள எதிர்ப்பு நிகழ்ச்சிகளிலும்கூட முன்னோடியாகத் திகழ்ந்து, தமிழ்மொழிப்பற்றினையும் தமிழ்த்தேசியத்தினையும் வெளிக்காட்டி நின்றவர். துணிச்சலும் சமூகப்பற்றும் விடுதலைத்தாகமும் கொண்ட இவர், கிராமத்து மக்களின் ஒற்றுமை, இளையோர் செயற்திட்டங்கள் என்பவற்றில் பங்கெடுத்து முன்னோடியாகத் திகழ்ந்தார்.

 
 இவரது ஆற்றல், அன்றிலிருந்து இன்றுவரை கூட வருவதொன்று. தனது 19வது வயதில் கறுப்புப் பால் என்ற ஒரு வித்தியாசமான தலைப்பில் சிறுகதையொன்றை ‘சன்மார்க்க தீபம்’ சஞ்சிகையில் வெளியிட்டார். ஏற்கனவே கையெழுத்துப் பத்திரிகை நடாத்திய அனுபவம் பெற்றிருந்த இவரது இந்த முதலாவது கதையே, இலக்கிய உலகிற்கு இவரை அறிமுகப்படுத்தியது. இவரது சிறுகதைகளான கறுப்புப்பால் கதவைத்திறவுங்கள் ஆகியன வானலை வித்தகர்களான அமரர்கள் கே. எம். வாசகர் எஸ் கே பரராஜசிங்கம் ஆகியோரின் பாராட்டைப்பெற்றிருந்தது.சன்மார்க்க தீபத்தில் தொடர்ந்து பல ஆக்கங்களை வெளியிட்டு சிந்தனைத் தெளிவினையும் துணிச்சலையும் ஏற்படுத்தினார். எனினும் சில சூழ்நிலைகள் காரணமாக எண்பதுகளில் நாட்டினை விட்டுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றவேளையில், மோகனாதேவியைத் திருமணம் புரிந்து கொண்டார். இரண்டு பிள்ளைச்செல்வங்களுக்குத் தந்தையானார். மகன் அஜந்தனும் மகள் ஆஸ்லியும் அவரது பிள்ளைச்செல்வங்களாவர். 
 
 பிரான்சு நாட்டில் இவரது பல அரிய நிகழ்வுகள் இடம்பெற்றன. புலம்பெயர்ந்து வந்தாலும் மண்பற்றும் சமூகஎண்ணமும் இவருடன் கூடவந்தவை. 1984ல் தியாகி பொன். சிவகுமாரனின் பத்தாவது நினைவு நாள் மிகவும் சிறப்பான முறையில் நிகழ்வதற்கு இவரே காரணமாவர். எல்லாத்தழிழ் இயக்கங்களையும் ஒருசேர, பொதுமேடை அமைத்து அரசியல் அறிவினை ஊட்டமுடிந்தது. செல்லும் இடமெல்லாம் இவரது செயல்கள் வித்தியாசமானவையாகவே இருந்தன. பிரான்சிலும் மாந்த்லாஜொலி நலன்புரிச் சங்கம் ஒன்றினை ஆரம்பித்து, இளைஞர்களைத்திரட்டிச் செயற்பட்ட வேளையில், அந்த நாட்டின் சூழ்நிலையால் பல சோதனைகளையும் எதிர் கொண்டார். 
 
 கனடாவுக்குப் புலம்பெயர்ந்துவந்த வேளையிற்றான் இவரது பன்முக ஆற்றல்கள் வெளிப்பட்டன. மொன்றியலில் உள்ள ‘தமிழர் ஒளி’ இவருக்கு நிர்வாகப் பதவியினை வழங்கியதுடன் இவரது பல செயற்பாடுகள் அங்கு வாழ்ந்த தமிழ்மக்களுக்கு உதவியுள்ளது. கியுபெக் மாகாண அரசின் செயற்றிட்டத்தின்கீழ் தமிழர் ஒளியினரால் நடாத்தப்பட்டு வந்த பயிற்சிநெறி நிறுத்தப்பட விருந்தவேளையில் தனது வாழ்க்கைத்துணைவியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை யிலும் பெருமுயற்சி செய்து மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கச்செய்து 90000 டொலர்களுக்குமேலாக சேமிக்க வழிசெய்தவர். தமிழர் ஒளி நடாத்திய தமிழ் ஒளி சஞ்சிகை, வானொலிச்சேவை, ஆங்கில பிரெஞ்சு வகுப்புக்கள் போன்ற பலவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழர் ஒளியின் வரலாற்றில் இவரது பதிவுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. தமிழர் ஒளி சஞ்சிகையில் இவர் எழுதிய ‘நான் ஒரு கோழை’ என்ற அற்புதமான கதை பலரின் கவனத்தையும் ஈர்த்தது எனலாம். 
 
 ரொறன்ரோவுக்குத் தனது இருப்பிடத்தினை மாற்றிய இவர் முழுமையான பல சேவைகளை ஆற்ற ஆரம்பித்தரர். குறிப்பாக இவரது எழுத்துக்கள் பிரகாசித்தன. இளவாலை எஸ்.ஜெகதீசனால் வெளியிடப்பட்ட ‘பொதிகை’ சஞ்சிகையிலும் அன்றைய ‘செந்தாமரை’ பத்திரிகையிலும் தனது சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். செந்தாமரையில் வெளியான ‘ஒரு ஓணான் தலையாட்டுகிறது’ என்ற கதை பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது. ‘நம்நாடு’ பத்திரிகையில் ‘தீவகம்’ இராஐலிங்கத்துடன் சேர்ந்து துணையாசிரியராகச் செயற்பட்ட வேளையில் ‘உள்ளத்து நெருடல்களும் உண்மையின் தேடல்களும்’ என்ற பகுதியில், இவரது எழுத்துக்கள் கடல்கடந்தும் பலரது பாராட்டுக்களப் பெற்றுக்கொண்டது. உண்மைகளைத் துணிந்து கூறும் இவரது ஆளுமைக்கு நிகர் இவரேதான். குடும்ப சூழ்நிலை காரணமாக எழுத்துப்பணி சிறிது தளர்ச்சி கண்டாலும், இலக்கிய நிகழ்வுகளிலும் நூல் வெளியீடுகளிலும் பங்குபற்றத் தவறமாட்டார். 
 
 சிறுகதைகள் மட்டுமன்றி, கவிதை யாத்தலும் இவருக்குக் கைவந்த கலையொன்று. கீதவாணி வானொலியில் தீவகம் இராஐலிங்கம் நிகழ்த்திய கவியரங்குகளிலும் இளையபாரதியின் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிய இவர், இன உணர்வும் உள்ளவரென்றே இனம் காணப்பட்டுள்ளார். நியாயத்திற்குப் போராடும் இவர், பல சவால்களையும் எதிர்பார்ப்புக்களையும் சமாளிக்கும் திறன்கொண்டவர். நேர்மையான கருமம், புனிதமான செய்கை என்ற வார்த்தைகளுக்குப் பொருத்தமான இவர், புதிய உலகம் படைக்கப் புறப்பட்டு பல சோதனைகளையும் தடைகளையும் கண்டவர். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் நன்கு பரிச்சயப்பட்டுள்ளார். இவர் கணிதத்திலும் கணக்கியலிலும் கூட திறமையுள்ளவர். தனது குடும்ப நலனுடன் கூடவே குரும்பசிட்டி மக்களின் நலனில் உள்ள ஆர்வ மேலீட்டால், இவர் உருவாக்கிய ‘பொன்வயல் மலர்’ பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. முன்ளாள் ரொறன்ரோ நகர மேயர் கௌரவ மெல் லாஸ்ட்;மன் அவர்கள், சிறந்த நலன்புரி சேவைக்கான விருதினை 2001ம் ஆண்டில் இவருக்கு வழங்கிக் கௌரவித்திருந்தார். குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களுக்கு ‘ஆவண ஞானி’ பட்டம் வழங்கியதும், கவிஞர் கந்தவனம் அவர்களுக்கு ‘இலக்கிய வித்தகர்’ பட்டம் வழங்கியதும், இவர் குரும்பசிட்டி நலன்புரிச்சங்க தலைவராக இருந்த போது நிகழ்ந்தவைகளாகும்.
 
 இரண்டாயிரம் ஆண்டு ஐப்பசி மாதம் இவரது சிறுகதைத் தொகுதியான ‘இங்கேயும் மனிதர்கள்’ வெளியான போது, உலகின் பல பாகங்களிலும் இவரது எழுத்தாற்றல் அறியப்பட்டது. இளையபாரதி குறிப்பிட்டது போன்று இவரது வாழ்வும் எழுத்தும் ஒரே அலை வரிசையோ என்று எண்ணவைத்தது. வித்தியாசமான கலை ஈடுபாடுகளையுடைய, பல கலைஞர்களைக்கொண்ட வித்தியாசமான ஊர் குரும்பசிட்டி என்று ‘இரசிகமணி’ கனக செந்திநாதன் குறிப்பிட்டதுபோன்று இவரும் வித்தியாசமான ஒருவரே. இவரது துணிச்சலை எம்மால் புரிந்துகொள்ள முடியாது எனினும், புரிந்து கொண்டால் அவரைவிட்டு அகலமுடியாத அளவுக்கு ஆழமான திறன்களும் ஆளுமையும் கொண்டவர் என்பதுதான் உண்மை. எந்தச் சிறிய தலைப்புக்கும் உள்ளடக்க முடியாத பல திறமைகளும் கொண்ட, மதப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட, மனிதநேயர் என்றே இவரை இனம் காணமுடிகிறது.


 
   ஆக்கம்:எஸ்.பத்மநாதன்.
             முன்னைநாள் விரிவுரையாளர்