Print
Category: எம்மவர்பக்கங்கள்
Hits: 1296

மரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சூரியனின் இராட்சியம் என அழைக்கப்படும் புளொரிடாவின் மயாமி நகரில் வசிக்கும் ஈழத்து இசைக்குடும்பம் ஒன்றில் உதித்த சகீலன் சிவகுமார் சின்னராசாவின் மிருதங்க அரங்கேற்றம் 16.06.2007 சிறப்புற நடைபெற்றது. பதினெட்டு வயதுநிரம்பிய இந்த இளைஞன் இசைக்கலையில் நாட்டம் கொள்ள அவன் பாட்டன் மறைந்த வைத்திய கலாநிதி இளையதம்பி சின்னராஜாவே காரணம். இறைவழிபாட்டின் போது தன் பாட்டனின் படத்தை வணங்கியே நிகழ்ச்சியை ஆரம்பித்தபோதே அவனது குருபக்த்தி வெளிப்பட்டது.

 அவன் தாய் ஹரிஜா சிவகுமார், ஒரு பரதநாட்டிய ஆசிரியர், தென் இந்தியாவின் கலாசேத்திராவில் நடனக் கலையைக் கற்று சிறுவயதிலேயே நடன அரங்கேற்றம் கண்டவர். வீணை இசையை சிறுவயதிலேயே கற்றவர். கடந்த இருபது வருடங்களாக புளொரிடா மாநிலத்தில் பரதக் கலையைக் கற்பித்து வருகிறார். பாலர் முதல் பல்கலைக்கழக மாணவியர் வரை அவரிடம் நடனம் பயின்று அரங்கேறியுள்ளார்கள். அந்த தாய்க்கு உதித்த தலைமகன் சகீலன் இசைக்கு கொடுக்கும் மதிப்பும், முதியோர்க்கு கொடுக்கும் மரியாதையும் பார்த்து அவன் வயது ஒத்தவர்கள் அவனிடம் பாடம் கற்கவேண்டும். சகீலன் குரும்பசிட்டி சித்தி விநாயகர் ஆலய முகாமையாளர் மறைந்த மாப்பாணர் இளையதம்பி தம்பதிகளின் பூட்டன். 

மயாமி பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகக் கடமைபுரியும் கலாநிதி. ராமகிருஷ்னன் அவர்களிடம் கடந்த பத்து வருடங்களாக மிருதங்க இசையை முறையாகப் பயின்ற சகீலன் மேலதிக பயிற்சியை தென் இந்தியாவின் முன்னணி மிருதங்க வித்துவானாகத்திகழும் இந்திய குடியரசுத் தலைவர் விருது பெற்ற கலைமாமணி ”மிருதங்கசக்கரவர்த்தி” திருவாருர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்க இசையின் நுட்பங்களை கற்று தன் விரல்களின் அசைவால் இசை மழை பொழிந்த போது குருவே மெய்மறந்து மேடையில் சென்று சகீலனை வாழ்தியதைக்கண்டு சபையில் கரகோசம் வானைப்பிழந்தது. 

அழகுற அமைக்கப் பெற்ற அரங்கத்தில் மங்கள இசை பொழிய இன்னிசைவேந்தன் நாகேந்திரம், நாதவிநோதன் சித்திரவேல், தவில் இளவரசன் மனோகரன் ஆகியோர் கனடாவில் இருந்து வருகை தந்திருந்தனர். ஒரு மணிநேரமாக நடைபெற்ற இவ் இசைவேள்வியில் ”சிங்காரவேலனைக்” கூவி அழைத்தபோது சபையில் இருந்தோர் மெய்மறந்து தாளம் போட்டனர். 

நிகழ்சியினைத் தொகுத்து வழங்க கவிதைக் குரலோன் பி. ஏச். அப்துல் ஹமீட் அவர்கள் இலங்கையில் இருந்து வந்திருந்தார். அவரது முன்னுரையைத் தொடர்ந்து தோடிராகத்துடன் அரங்கேற்றம் ஆரம்பமாகியது. பாடல்களை தமிழ்நாட்டின் அரச இசைக் கல்வி நிலைய ஆசிரியரும், சங்கீத கலாநிதி டி. கே. பட்டம்மாளின் மாணவியுமான கலைமாமணி கீதா ராஜாசேகர் அவர்கள் இசைத்தார். வயலின் இசையை மைசூர் சிறீகாந்த் அவர்களும், கடம் இசையை ஆடம்பாக்கம் சங்கர் அவர்களும் வழங்கினார்கள். சகீலனின் முதற்குரு கலாநிதி. ராமகிருஸ்னன் அவர்களே கஞ்சிரா இசைத்தார். நிகழ்ச்சியின் இடையிடையே நடைபெற்ற தனி ஆவர்த்தங்களின் போது வயலின் இசைக்கும் கடம் விடுத்த அழைப்புக்கும் சகீலன் தன்விரல்அசைவால் மிருதங்கத்தில் அளித்த பதில் மண்டபத்தின் உள்ளே கரகோசத்தையும் வெளியில் மழையையும் வரவழைத்தது. 

நிகழ்ச்சியில் மயாமி சிவவிஸ்னு ஆலயத்தை நினைந்து பாடிய பாடல் சிறப்பாக அமைந்தது. இசையின் நடுவே கவிதைக் குரலோன் பி. ஏச். அப்துல் ஹமீட் அவர்கள் அறிமுகப்படுத்த அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். சகீலனை நடிகர் பத்மஸ்ரீ கமலகாஷான் செய்மதி வழியாக வாழ்த்திக் கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து பிரமுகர்களின் வாழ்த்தும் இடம்பெற்றதோடு மங்களம் இசைத்து விழா நிறைவடைந்தது. நன்றியுரையை சகீலன் தன் பெற்றோருடன் இணைந்து வழங்கினார். 

சகீலன் மிருதங்க இசையுடன் மேல் நாட்டு இசைக் கருவிகளையும் மீட்கும் ஆற்றல் படைத்தவர். பாடசாலை சிம்பொனி இசைக்குழுவில் ஒரு உறுப்பினர். மயாமி நகரின் முன்னணி பாடசாலை ஒன்றில் உயர் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்ல தயார் நிலையில் உள்ள இந்த இளைஞன் விளையாட்டிலும் பல திறமைகளைக் கொண்டவர். பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர். 
 

கல்வி என்பது இவனுக்கு இறைவன் அளித்த வரம். கடும் உழைப்புக்கு நிகர் எதுவும் இல்லை என்பதை சகீலன் நன்கு அறிந்த மாணவன். தான் கற்கும் பாடசாலையில் முதியோர் நலத்திட்டம் ஒன்றிற்கு உதவி புரிந்து பாடசாலையில் உயர் மதிப்பு பெற்ற இவனைப் பாராட்டி பத்திரிகைகளே வாழ்த்தி உள்ளன.

இறைவனின் இருப்பிடம் என்று அழைக்கப்படும் உலகின் முதற்தர நாட்டில் பிறந்தும் தன் தாய் நாட்டின் கலாச்சார விழுமியங்களை பேணிப் பாதுகாத்து எதிர்கால வெற்றிக்கு வீறுநடை போடப் புறப்பட்டிருக்கும் இந்த இளம் தமிழன் வாழ்வில் சிறப்புற எல்லாம் வல்ல குரும்பை நகர் சித்தி விநாயகர் துணை நிற்கவேண்டுகிறோம்.