குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி... என்று தொடங்கும் தேவாரம் காதில் இன்றும் தேனாகப்பாயக் காரணம் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களின் மனங்களில் பண்ணோடு இசை புகட்டிய ஆசிரியர் மு. இராமலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது.

 வெள்ளை உடையும், நீறு பூத்த நெற்றியும், நிமிர்ந்த நடையும், நெகிழ்வான பேச்சும், தனக்கே உரிய பணிவும் கொண்டு ஆன்மீகத்திற்கு இலக்கணமாகவும் ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாகவும் வாழ்ந்து மூன்று தலைமுறைக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியார் திரு. இராமலிங்கம் அவர்கள் எந்த நிலையிலும் தளராத மனம் கொண்டவர், எந்த செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தவர், எதைச் சொன்னாலும் அர்த்தம் உள்ளதாக பொருள்விளங்க உரைப்பவர்.

 1971 ஆம் ஆண்டு பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் மூன்றாம் வகுப்பில் ஒரு நாள் வகுப்பாசிரியர் சமூகமளிக்காத காரணத்தால் இந்த ஆசானின் பிரசன்னம் திடீரெனக் கிடைக்கப் பெற்றது. வகுப்பறையில் இருந்த மாணவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டே பெயர்களிற்கு உரிய அர்த்தங்களை கூறியவர், தங்களின் பொயர்களின் உவமானம் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதைப் புரியவைத்து, காரணம் தெரியாது காரியம் ஆற்றுவது தவறு என்பதைப் தெளியவைத்தவர். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றை சிறிய உதராணத்தின் மூலம் புகட்டிய இந்தப் பெருந்தகை படித்தவர்கள் மட்டுமல்லாது பாமரர்களாலும் மதிக்கப்பட்ட நல்லாசிரியர். 

எத்தனை ஆசியர்களிடம் கல்வி கற்றாலும் அத்தனைபேரையும் மாணவர்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. ஆனால் இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள் குரும்பசிட்டியில் கல்வி கற்ற ஒவ்வொருவர் மனங்களிலும் இடம் பிடித்திருப்பதற்கு காரணம் அவர் தன்னகத்தே கொண்ட சிறப்பம்சங்களே ஆகும். நல் ஒழுக்கம் கொண்ட மாணவர்களை உருவாக்கும் சிறந்த பணியை தன் வாழ்நாள் தொண்டாக நினைத்து வாழ்ந்தவர். எழுத்து அறிவித்தவன் இறைவன் என்னும் முது மொழிக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், மூன்று தலைமுறைக்கு எங்கள் ஊரிலும், தான் இடம் பெயாந்து இந்தியாவில் வாழ்ந்தபோது எங்களது நான்காவது தலைமுறைக்கும் ”அ” சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்னும் பெருமைக்குரியவர். 
 
 கிராமிய வங்கிகளின் உருவாக்கத்தின்முன் பல காலங்களாக எம் ஊர் விவசாயிகளின் நலன்கருதி தொடக்கிவைக்கப்பட்ட ஜக்கிய நாணய சங்கம் என்னும் கடன் வழங்கும் அமைப்பை செவ்வனே நிர்வகித்து பல ஏழை விவசாயிகளுக்கு உதவிபுரிந்தவர் ஆசிரியர் இராமலிங்கம் அவர்கள். ஆசிரியர் சேவையில் இருந்து ஒய்வு பெற்றபின் மாணவர்கள் ஆலயங்களில் பண்ணோடு தேவாரம் பாட வேண்டுமென்ற நல்நோக்கத்தோடு அயலூர் ஒதுவார்மூர்த்தி சுப்பிரமணியம் அவர்களை வார விடுமுறை நாட்களில் தன் இல்லத்திற்கு அழைத்து மாணவர்களுக்கு பண்ணிசை வகுப்புக்குகளை நடாத்தி நல்வழிகாட்டியவர். 
 
 மார்கழி மாதத்து திருவெம்பாவை காலத்தில் எங்கள் ஊர் அன்னை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் பத்து நாட்களும் நடைபெறும் திருவிழாக்காலத்தில் புட்டுக்கு மண்சுமந்த மேனியரின் கதைக்கு புத்தகம் பார்க்கமால் விளக்கம் கொடுக்கும் திறன் படைத்தவராவர். இறைவனை இறைந்து வேண்டி தேவார பாராயணம் ஓதியபடியே ஆனந்தக்களிப்போடு அம்பாள் ஆலய உள் வீதி, வெளி வீதி வலம்வரும் இவரின் பணிவுக்கு ஆலய பூசகர்களே கட்டுண்டவர்கள். 
 
 இல்லறத்தில் இணைபிரியாது இவருடன் இணைந்தே இருந்த இல்லத்தரசி நல்ல(அ)ம்மா, தன் துணைவனின் வரவை எதிர் கொள்ள, எண்ணி எட்டு மாதங்களின் முன் இவரிடம் இருந்து விடைபெற்று சென்றார். காதலால் மனமுருகி நெஞ்சத்தை உருகவைத்து இறைவன் துதிபாடிய இராமலிங்கம் ஆசிரியர் இறைவனின் இருப்பிடத்தில் இல்லத்தரசியுடன் இணைந்திருந்து தன் பணியைத் தொடருவாராக. 


 
 
 ஆக்கம் :- மகேசன்மைந்தன் -