குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

வெள்ளை உடையும் வீபூதி தரித்த நெற்றியுடனும் எமது கிராமத்தில் பலரைப் பார்த்து இருக்கின்றோம். அவர்களில் தெய்வீக உருவில் ஆலயங்களில் காணப்படுபவர்களில் திரு. இளையதம்பி அவர்களும் ஒருவர். இவர் ஒரு இளைப்பாறிய அரசாங்க தபால் அதிகாரி. ஆனால் நாமெல்லாம் அவரை ஒரு சமாதான நீதிபதியாகவே அறிந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு திருமணப் பதிவாளராகவும் கடமையாற்றியவர். 

தெய்வீகத்தன்மை கொண்ட அந்த உயர்ந்த மனிதரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவே அவரது சமாதான நீதிபதி பட்டத்தைப் பார்க்க வேண்டும். அந்தப் புகழே மற்றயவர்களிடம் இருந்து அவரைத் தனித்து அடையாளப்படுத்திக்காட்டியது. அவரது பெயருடன் அவரது பட்டமே முதல் எழுத்தாகப் பிரயோகிக்கப்பட்டது.

சைவசமய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஆகம விதிகளை நன்கறிந்த நமது ஊர் பெரியவர்களில் பெருமதிப்புக்குரியராகத் திகழ்ந்தவர். தீட்சைகளில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவதீட்சை பெற்று தினமும் சிவ வழிபாடு செய்தவர். ஆழ்ந்த சிந்தனையும், நுண்ணிய அறிவும் கொண்டு எல்லோருடனும் பண்பாக பழகும் அந்த நடமாடும் தெய்வத்திடம் கோவில் அர்ச்சகர்களுக்கே ஒரு பணிவு இருந்தது. அது பயத்தினால் அல்ல பக்தியினால் வந்ததாகும்.

எப்போதுமே கனிவுடன் பேசுபவர், நேரத்தைப் பொன்னாக மதித்தவர். நேரத்த்தின் பொறுமதியை மதிக்க மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தவர். கோவில் திருவிழாக்கள் என்றாலும் வேறு எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு நடைபெற வேண்டுமென்ற கடப்பாடு கொண்டவர். நமது ஊரின் முன்னேற்றத்துக்கான பணிகளில் உயர்ந்த சேவையாற்றியவர். அவரது சேவைக்காக அயல் கிராம மக்களும் அவரை நாடி வந்தனர். 

அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்வும், அவர் கடைப்பிடித்த ஒழுக்கமும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. அவர் விட்டுச் சென்ற திருமணப்பதிவாளர் என்னும் பதவி; இன்று வரை எமது கிராமத்தில் நிரப்பப்படாத ஒரு வெற்றிடமாகவே உள்ளது.
 

ஆக்கம் :: மகேசன்மைந்தன்